அன்னை
அம்மம்மா....அம்மம்மா...
உன்னை நானே வணங்கினேன்.
ஆரிராரோ...ஆரிராரோ...
பாட்டில்தானே தூங்கினேன்.
கருவறை இருட்டுச் சிறையினில்
என்னை வளர்த்தாயே - யசோதா
பத்து மாதம் என் பாரம் சுமந்து
என்னை பெற்றாயே - கண்ணனாய்
உன் தோள் தூளிகையில் போட்டு
என்னை தாலாட்டினாய் - தாயே
உன் மார்பில் எனை அணைத்து
பாலூட்டினாய் - அன்னையே
தவழ்ந்து நான் நடைபயில - என்கூடவே
நீயும் நடந்தாய்.
தத்தித்தத்தி நான் ஓடுகையில்
தத்தையெனவே ஓடி வந்தாய்.
மெல்ல மெல்ல நான் வளர்கையில்
என்கூடவே நீயும் வளர்ந்தாய்.
நீ சொன்ன கதைகள்யாவும் இன்றும்
என் காதுகுள்ளே கதைக்கிறதே..
நிலாவை காட்டி ஏமாற்றி நீ ஊட்டிய
நெய்சோறு இன்னும் என்நாவில் இனிக்கிறதே.
என் இசை கீரவாணிக்கு நீதானே முழு ரசிகை
என் கை தூரிகைக்கு நீதானே வடிவான ஓவியம்
என் இமை மூடி சாய்ந்திட உன் மடிதானே பஞ்சணை
என் இதழ் என்றும் சிரித்திட நீ தானே 'டெடிபேர்'.
உன்கை பக்குவம் ரசம்கூட ஊரெல்லாம் மணந்ததுவே
உருளைக்கிழங்கு வருவல்கூட நாவினில்தான் ஊறியதே
கூடப்பிறந்த பிறப்புகளில் நான்மட்டும் உனக்கு ஸ்பெஷல்
அதனால்தானோ எனக்கு உற்ற தோழியானாய்..நல்ல துணையானாய்
உன்னோடு பகிராத ரகசியங்கள் ஒன்றும் இல்லை.
நீபடித்து படித்து முடித்த நூல்கள் ஏராளம்.
அது என் உதிரம் ஊறி வளர்த்ததுவே என் அறிவை தாராளம்.
அதனால்தானே அனுபவங்கள்கூடி சபைதன்னில்
என் புகழும் கூட்டியதே...நட்பும் கூடியதே!
உனக்கு நன்றியென்று என்னால் சொல்ல முடியாது.
நன்றிக்கு அப்பாற்பட்ட பிறவிக்கடன். தீரவும் தீராது.
நீ மறைந்த போதுதான் நான் அனாதையானேன்.
நட்பு...உறவு...தாய்மை...எல்லாம் விட்டுப்போய்
நான் மீண்டும் மீண்டும் அனாதையானேன்.
மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால்
மறுபடியும் உன் கருவறை சிறைக்குள்
சிறைவைப்பாய் என்னையே....
அந்தக் கதகதப்பில் நான்
மறக்கவேண்டும் தன்னையே.
அன்னையே உன்னடித் தொழ நான்
செய்த பாக்கியம்தான் என்ன?
பாழும் இவ்வுலகில் உன்னைவிட்டால்
எனக்கொரு ஆறுதல்தான் என்ன?