உங்களுக்காக ஒரு கடிதம் 18
அன்புத் தோழர்களே,
ரெடியாகிவிட்டீர்களா? என் கடிதத்தை படிப்பதற்கு. என் மனதிற்கு நல்லது என்று பட்டதை எழுதுகிறேன். இதை ஆதரிப்பவர்களும் இருப்பார்கள். எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். பிடித்தவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள். பிடிக்காதவர்கள் யோசியுங்கள். எது எப்படி இருந்தாலும் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்து பிரச்சனைகளை சுமூகமாக முடிப்பதற்கு, ஒரு முடிவுக்கு கொண்டுவர எல்லோரும் முயலுவோம்.ஒவ்வொரு அடியாய் எடுத்து வைப்போம். ஒவ்வொரு அடி அடிக்க அடிக்க அம்மியும் நகரும் அல்லவா?
முதலாவதாக என்னை மிகவும் பாதித்தது. நாம் அன்றாடம் சந்திப்பது. "சாலை விதிகள் ". இப்போ நான் சொல்ல வருவது...ஓரளவு எல்லோருக்கும் புரிந்திருக்கும். நம் எல்லோருக்கும் வாகனங்கள் ஓட்ட, ஓட்டுநர் உரிமம் மிக அவசியம்.அதை பெறுவதற்கு 18 வயது பூர்த்தி ஆகி இருக்கவேண்டும் என்பது சட்டம். ஏனென்றால் அந்த வயதில்தான் 'மன முதிர்ச்சி' ஏற்படும் என்கின்ற ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையில்தான் அவர்களும் நமக்கு உரிமம் தருகிறார்கள். ஆனால் உரிமம் பெற்ற பிறகு நாம் வண்டி எப்படி ஒட்டுகிறோம் என்பது நாம் யாவரும் அறிந்ததே.
ஒழுங்காக அவரவர் போகும் பாதையில்... ஒருவர் பின் ஒருவர் போனால்... போக்குவரத்தில் எந்தவித குழப்பமும் ஏற்படாது. ஏன்... போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போகுமே!. ஒருவரை ஒருவர் முந்துவதால் ஏற்படும் பிரச்னைகள்தான் அதிகம். அதை விட கொடுமை...எதிரே வரும் பாதையை பாதியை அடைத்து கொண்டு நின்றால் ... எதிரே வரும் வாகனங்கள் கதி என்னாவது? அவர்களும் போகமுடியாமல் வாகனத்தை நிறுத்த வேண்டியது அவசியமாகிறது. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சரிதானே...! அதைவிட அடுத்து நடப்பதுதான் கொடுமை.. பஞ்சாயத்து....நான் வந்தது சரிதான். உனக்கெல்லாம் எவண்டா லைசன்ஸ் கொடுத்தது? நான் யார் தெரியுமா? என் பின்புலம் என்ன தெரியுமா? என்று சக பயணிகள் கூட சண்டை போடுவது மட்டும் அல்லாமல் அங்கு வரும் போலீசிடம் கூட சண்டைக்குப்போகும் நிகழ்வுகளை தினமும் பார்க்கிறோம். அவரவருக்கு அவரவர் சட்டம். சட்டம் மட்டுமல்ல அவரவருக்கு அவரவர் தீர்ப்பு. இதற்கு மூல காரணகர்த்தா யார்? நீங்களே யோசியுங்கள்.
அவசரம்...அவசியம்... இந்த இரண்டும் நாம் அடிக்கடி கேட்கின்ற வார்த்தைகள்தான். அவசரம் என்றால் கொஞ்சம் முன்பே புறப்பட வேண்டும். பல சமயம் நாம் புறப்பட வேண்டிய நேரத்தை தள்ளிப்போட்டு, கடைசியில் வேகமாக போய் விபத்தில் முடிந்து பல சமயம் சாவில் முடிந்து உயிரே போய்விடுகிறது. அப்படி அவசரமாகி போய் உயிரை விட்டு விட்டால் நம் தொடர்புடைய அத்தனை காரியங்களும் 'குறை பிரசவமாய்' சம்பவித்தது முற்று பெறாமல் குற்றுயிராய் முடிந்து விடுகிறது. இது தேவையா? அவசியம்...சில நிகழ்வுக்கு நம் ப்ரசன்ஸ் மிக முக்கியமாக இருக்கும். நம் உதவி மிகமிக அவசியமாக இருக்கும். அப்போது இப்படி ஏதாவது நடந்தால்....எப்படி இருக்கும்? இதற்கு தீர்வு...? சிந்தியுங்கள்.
ஓட்டுவது இளைஞராய் இருந்தால்...உங்களுடைய பெற்றோரை...கூடப்பிறந்த பிறப்புகளை யோசித்து பாருங்கள். உங்களுக்கு பின்னால் இருக்கும் கனவுகள்...எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் எண்ணிப்பாருங்கள். நிதானம் இருந்தால்...சில நிமிடங்களினால் ஒன்றும் குறைந்து விடாது. நேரத்தின் அருமையை உணருங்கள்.
ஓட்டுவது வயதினராக இருந்தால்....உங்களை நம்பி இருக்கும் பெற்றோர், மனைவி, மக்கள் என்று உங்கள் வரவை நம்பிக்கையோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் அவர்களின் நம்பிக்கையை பொய்த்துவிடாதீர்கள். உங்களின் உயிர் அவர்களின் சொத்து. அதை போக்கிக்கொள்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை. அகால மரணம்.அது நம் கையில் இல்லாதது. நம் சக்திக்கு அப்பாற்பட்டது.அதை விளக்குவதற்கு எனக்கு ஞானம் இல்லை.
தொடரும்.