குதிரைக்கொம்பு

வான்வெளியில் மிதக்கிறது
வீணாய்ப்போன விண்கலச் சடலங்கள்
சுற்றிச் சூராள மடிக்கிறது -அதை
ஏந்திச்சென்ற ஏவுகணை எச்சங்கள்

ஆழ்கடலின் அதள பாதாளத்தில் நீந்துகிறது
ஆகாயத்தில் பறந்து அகால மரணமடைந்த விமானங்கள்
அல்லாடி அலை மோதுகிறது
தரைதட்டித் தலைக்குப்புறக் கவிழ்ந்தக் கப்பல்கள்
கரையேறக் காத்துக்கிடக்கிறது –கடல் நடுவில்
செத்துமிதக்கும் திமிலங்கள்

கரும்பு வாழைக் கழனிகளில் பாய்கிறது
பளிங்குகல் பாவிய பாதாளச் சாக்கடை ஊற்று
மழலையர் பூங்காவில் மல்லுகட்டுகிறது
மாடிவீட்டு மலக்கிடங்குக் காற்று

அரசியல் அரங்கில்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் –அது பழையக் கோட்பாடு
தகுதியுள்ளவைத் தப்பிப் பிழைத்தல் புதிய ஏற்பாடு
வறுமைக் கோடுகளைப் பிரசவிக்கிறது ஒழுங்கீனக்கோடு

மண்டிக் கிடக்கும் – இந்த
மக்காதக் குப்பைகளை
மலக்கிடங்குச் சாக்கடைச் சகதிகளை சுத்திகரிக்க
மண்ணிலும் விண்ணிலும்
மலையாறு கடலிலும் இருக்கும்
மற்ற பயிரினங்கள் உயிரினங்களாவது தப்பும்

அரசியல் சுத்திகரிப்பு என்பது அதுவாய் நடக்கும்
குதிரைக்குக் கொம்பு முளைத்த மறுநாளே

-நரியனூர் ரங்கநாதன்
செல்: 94420 90468

எழுதியவர் : நரியனூர் ரங்கநாதன் (19-May-22, 11:22 am)
சேர்த்தது : ரங்கநாதன்
பார்வை : 75

மேலே