சேத்திரத் திருவெண்பா - பாடல் 20 - கச்சித் திருவேகம்பம்

சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.

என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் - வன்னஞ்சேய்
மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு. 20

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).

இவ்வெண்பா, '’நெஞ்சே! யானைத்தலையுடைய அசுரனின் தோலை உரித்துப் போர்த்தவனை சிறப்பு மிக்க காஞ்சி ஏகம்பத்தில் உறையும் இறைவனை, சிவபெருமானை இறைஞ்சி வணங்கு’ என்று கூறுகிறது.

பொழிப்புரை:

எனது நெஞ்சே! உன்னை வேண்டி இரந்து என் குறைகளைச் சொல்கின்றேன். நான் சொல்வதை நீ காது கொடுத்துக் கேட்பாயாகில் காலத்தால் கொடிய நஞ்சு போன்ற அசைதலையுடைய பெரிய யானைத்தலையுடைய அசுரனின் தோலை உரித்துப் போர்த்தவனை சிறப்பு மிக்க காஞ்சி ஏகம்பத்தில் உறையும் இறைவனை, சிவபெருமானை இறைஞ்சி வணங்கு’ என்கிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.

குறிப்புரை:

இரத்தல் - குறையிரத்தல், கன்னம் - செவி. அதனைச் செய்தலாவது, செயற்படச் செய்தல்; கேட்டல் `செவிசாய்த்தல்` என்றலும் வழக்கு.

வல் நஞ்சு ஏய் - கொடிய நஞ்சு போன்ற.

நஞ்சுய் ஆனை, மா ஆனை, கம்பத்து ஆனை` எனத் தனித்தனி இயையும்.

மா – பெரிய, கம்பத்து – அசைதலையுடைய, கச்சி - காஞ்சி.

ஏகம்பம் அத்தலத்தில் உள்ள கோயில்.

இறைவன் - திருவேகம்பர், ஏகாம்பரநாதர், ஏகாம்பரேஸ்வரர்
இறைவி – ஏலவார்குழலி.

தொண்டை நாட்டுத் தலம்: சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்துகள் அடிக்கடி உள்ளன.

செங்கற்பட்டு - அரக்கோணம் இருப்புப் பாதையில், காஞ்சிபுரம் இருப்புப்பாதை நிலையம் - மத்தியில் உள்ளது.

சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வாழ்ந்த தெய்வப் பதி.

இவற்றுள் ‘பெரிய கோயில்’ என்றழைக்கப்படும் ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலே ‘கச்சித் திருவேகம்பம்’ என்று போற்றப்படும் பெருமை வாய்ந்தது. இத்திருக்கோயில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ளது. திருவேகம்பம், திருக்கச்சியேகம்பம், ஏகாம்பரநாதர் திருக்கோயில் எனப் பலவாறு அழைக்கப்படுவதும் இத்திருக்கோயிலே.

மாணிக்கவாசகர் இத்திருக்கோயிலைக் ‘கச்சித் திருவேகம்பன் செம்பொற்கோயில்’ என்று சிறப்பித்துப் பாடியுள்ளார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-22, 8:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே