சேத்திரத் திருவெண்பா - பாடல் 19 - திருவாய்ப்பாடி

சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.

உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள். 19

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).

இவ்வெண்பா, '’முன் செய்த வினைகள் உன் உடலும் உயிரும் சோர்வுற்றிருக்குங் காலம் வந்து உன்னைச் சேர்வதற்கு முன் பாலுகந்தீஸ்வரன் திருவடிகளை நினைக்க வல்லையே? நெஞ்சமே!’ என்று கூறுகிறது.

பொழிப்புரை:

நீ முன் செய்த வினைகள் உன் உடலும் உயிரும் சோர்வுற்றிருக்குங் காலம் வந்து உன்னைச் சேர்வதற்கு முன், கொள்ளிடத்தின் தெற்கில் திருஆப்பாடியில் உறைபவன், தெய்வமறைகள் நான்கினையும் தன் திருவாயால் பாடினவன், பாலுகந்தீஸ்வரன் திருவடிகளை நினைக்க வல்லையே? நெஞ்சமே! என்கிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.

குறிப்புரை:

உள்ளுதல் - நினைத்தல். உள்ளிட வல்லையே - நினைக்க வல்லாயோ.

கள் இடம் - களவான காலம். அஃதாவது உயிர் சோர்வுற்றிருக்குங் காலம்,

திருவாய்ப் பாடியான் - திருவாயால் பாடினவன்.

`தாள் உள்ளிடவல்லையே` எனக் கூட்டுக.

`கலவா முன் உள்ளிட வல்லையே எனவும் இயைக்க.
`வல்லையே` என்னும் வினா, `வல்லையாயின் நன்று` என்னும் குறிப்பினது.

திருஆப்பாடி (திருவாய்ப்பாடி)

இறைவர் திருப்பெயர்: பாலுகந்தநாதர், பாலுகந்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, பெரியநாயகி.
:
திருஆப்பாடி சோழநாட்டு (வடகரை)த் தலம். மக்கள் வழக்கில் ‘திருவாய்ப்பாடி’ ஆயிற்று.

கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில், சேங்கனூர் சாலையைத் தாண்டி, திருவாய்ப்பாடி உள்ளது. சாலையோரத்தில் ஊர் உள்ளது. ஊரை அடைந்து இடப்புறமாகச் செல்லும் வீதியில் சென்றால் கோடியில் கோயில் உள்ளது. (சேங்கனூர் என்பது சேய்ஞலூர் ஆகும்.)

திருவாய்ப்பாடி அடுத்து திருப்பனந்தாள் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் மண்ணியாறு ஓடுகிறது. இத்தலம் சண்டேசுவரர் வழிபட்ட பெருமையுடையது. மிகப் பழைமையான கோயில்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-22, 8:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே