கொடி மரத்தோப்பு

இல்லாத ஊருக்கு
இடைநில்லாப் பயணமிது
மூச்சிரைக்க ஓடினாலும் –முடிவில்
தொடக்கப் புள்ளியைத் தொட்டு முடிகிறது பாதை
கூட்டுப்பாதைச் சந்திப்பில்
கூட்டத்திற்குப் பஞ்சமில்லை
பொய்தேதியிட்ட பிறந்தநாளின்
தானதர்ம முகாம்கள் அங்கு வாடிக்கை- அதில்
தள்ளுமுள்ளுத் தடியடிப் பிரயோகம் பிரசித்தம்
குரைப்பதும் ஓர் உழைப்பு
துரத்துவது மாவீரம்
ஓடுவதும் ஒரு உபாயமே –எனும்
போக்கற்ற நாய்களின் புகலிடமும் அதுவே.
வண்ண வண்ணச்சுவரொட்டியை
வசமாய் உடுத்திக் கொண்டு எக்குத்தப்பாய் நிற்கிறது
இடுப்பொடிந்த பெயர்ப்பலகை
தோப்பாகி மிளிர்கிறது –தானைத்தலைவர்கள்
தகவமைத்த கொடிமரங்கள்
முகச்சவரம் கண்டு
முக்கூட்டு எண்ணை தேய்த்துக்குளிப்பாட்டி
மொடமொடவென ஆடையுடுத்தி
மூடிய கரங்களில் தாம்பூலம் தரித்து
மலர்க்கோலம் பூண்ட பழைய பாடையில்
பவனி வருகிறது ஒரு புத்தம் புதிய பிணம்
தாரைத் தப்பட்டை சரவெடி சகிதம்
தப்பித்தோம் பிழைத்தோம் –என
தலைத்தெறிக்க ஓடுகிறது இந்த தெருநாய்கள்
எதிர்ப்பட்ட பாதையில் இலக்கேதுமின்றி
-நரியனூர் ரங்கநாதன்
94420 90468