இன்னும் எத்தனை நாள்களோ

உண்டவன் இங்கே பெருத்துக் கிடப்பதும்
மண்ணை உழுதவன் சிறுத்துக் கிடப்பதும்
அண்டும் நுண்மியில் அழிந்து போவதும்
என்றும் நிரந்தரம் ஆனவை அல்ல !

பெற்ற கடனுக்காய் கயிற்றை நாடலும்
குற்ற உணர்வோடு கூனி வாழ்தலும்
கற்றிடும் கல்விக்காய் கவலைப் படுதலும்
தொற்றியே வருதலும் தொடர்கதை அல்ல !

எத்தனைக் காலங்கள் இப்படிக் கிடப்பதோ?
என்றொரு ஏக்கம் இங்கினி வேண்டாம்.
வெளிச்சத்தை நோக்கி வீறுடன் நடந்திடு
பளிச்சென வாழ்வினில் மின்னலும் தோன்றிடும்.

தூரத்தில் இல்லை தொடுவானம் என்பதும்
சோம்பலை விலக்கிடு தொட்டிடும் உன்னையும் !
வாராத வசந்தமும் வாசலைத் தட்டிடும்
தீராத வேதனை தீர்ந்தங்கே போயிடும் !

ஏற்றமும் இறக்கமும் வாழ்வுடன் இணைந்தது
போற்றலும் தூற்றலும் பொதுவென ஆனது
மாற்றம் என்பதோ மாறமல் இருப்பது
கூற்றுவன் என்பதும் கூடவே வாழ்வது !

துரத்திய தொற்றும் தோற்றுதான் போகும்
விரட்டிய வறுமையும் விரைந்திங்கு நோகும்!
உரசிய மடமையும் உருவிழந்து சாகும்
அறத்துடன் அன்பும் அரியணை ஏறும் !

மூடத் தனத்தில் மூழ்கிய மனங்கள்
ஓடத் தொடங்கும் உண்மையை உணர்ந்து
தேடத் தேடத் தேனாய் இனிக்கும்
நாட நாட நல்லதே நடக்கும் !

என்றும் எதுவும் நிரந்தர மல்ல !
துன்ப மென்பதும் தொலைந்து அழியும்
இன்பத்தின் ஊற்று ஆழத்தில் இல்லை
எண்ணும் நாளகளில் இதயத்தில் இனிக்கும்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (10-Jun-22, 6:54 pm)
பார்வை : 118

மேலே