நயமுணர்வார் நண்பொரீஇப் புல்லறிவி னாரொடு நட்பு – நாலடியார் 239

நேரிசை வெண்பா
(’ன்’ ‘ம்’ மெல்லின எதுகை)

ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ; - தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு 239

- கூடாநட்பு, நாலடியார்

பொருளுரை:

தேன் உண்டாகின்ற உயர்ந்த மலைகளையுடைய நாடனே!

இனியதறியும் பேரறிஞரது நண்பினின்றும் நீங்கிச் சிற்றறிவினாரோடு செய்யும் நட்பு,

ஆனிடத்தில் உண்டாகும் நெய்யைப் பெய்திருந்த கலத்தில் அந்நெய்யை நீக்கி வேம்பின் விதையைக் காய்ச்சியெடுத்த வேப்பெண்ணெயைப் பெய்து வைத்தாற் போன்ற தன்மையதாகும்.

கருத்து:

இனிதறியாத புல்லறிவினாரான கூடா நட்பினருடன் நேயஞ் செய்தலாகாது.

விளக்கம்: நயமுணர்வார் என்றார், இனியராய் ஒழுகும் இயல்பறிவார் என்றற்கு; சிற்றறிவினார்க்கு அத்திறம் வாயாமையின் புல்லறிவினார் என்று விதந்தார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jun-22, 10:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே