தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல் – நாலடியார் 240

இன்னிசை வெண்பா

உருவிற்(கு) அமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற்(கு) அமைந்தபால் நீரளா யற்றே
தெரிவுடையார் தீயினத்தா ராகுதல் நாகம்
விரிபெடையோ டாடிவிட் டற்று. 240

- கூடாநட்பு, நாலடியார்

பொருளுரை:

பார்ப்பதற்கு அழகனாய் உருவமைந்த ஒருவனிடம் நற்பண்பில்லாமை பருகுதற்கு அமைந்த பாலில் நீர் கலந்திருந்தாற் போன்ற தன்மையதாகும்.

தெளிந்த அறிவுடையார் தீய சார்புடையரோடு நட்புச் செய்தொழுகுதல் நாகப்பாம்பு பெட்டை விரியனோடு தவறாக இணைந்து விட்டாற் போன்ற தன்மையுடையதாகும்.

கருத்து:

நற்பண்பும், மெய்யுணர்வும் இல்லாதவருடன் கொள்ளும் நட்பு கூடாநட்பு ஆகும்.

விளக்கம்:

ஊரவற்கு உதவியாய் ஒழுகும் இயல்பு ஊராண்மை எனப்பட்டது.

தெரிவு – இடர் உற்ற நேரங்களில் ஆழ்ந்து மெய்ம்மை தெரிந்தொழுகும் அறிவு.

விரியனோடு கூடிய நாகம் தன்னியல்பு மாறித் தீயதாய்க் கெடுதலின், அது உவமையாயிற்று.

விரியனோடு நாகம் கூடினால் இறக்கும் எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jun-22, 10:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே