அரங்காடு கூத்தனே போலும் உயிர்தான் சுழன்றாடு தோற்றப் பிறப்பு – அறநெறிச்சாரம் 121

நேரிசை வெண்பா
(’ங்’ ’ன்’ மெல்லின எதுகை, ‘ர’ ‘ழ’ இடையின எதுகை)

அங்கம் அறவாடி அங்கே படமறைத்(து)
அங்கே ஒருவண்ணங் கோடலால் - என்றும்
அரங்காடு கூத்தனே போலும் உயிர்தான்
சுழன்றாடு தோற்றப் பிறப்பு 121

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

உயிர்கள் எழுவகைப் பிறவிகளிலும் சுழலுதற்குக் காரணமாகிய தோற்றத்தினையுடைய பிறப்பால் உடல் நீங்குந் துணையும் உலகில் ஆடித்தொழில் செய்து பின் உயிர் நீங்க உலகினின்றும் மறைந்து அப்பால் வேறொரு வடிவத்தைக் கொள்ளுவதால்,

நாடகத்திலே அங்கம் முடியுந் துணையும் ஆடியும், பின்பட மறைந்தும் பின் வேறோர் அரங்கத்தில் வேறோர் வண்ணங்கொண்டு ஆடியும் திரிகின்ற கூத்தனை ஒக்கும்.

குறிப்பு:

அரங்கு - கூத்தன் ஆடுமிடம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jun-22, 6:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே