ஓரிடந்தனிலே - வேலைக்காரி

வேலைக்காரி (1949) திரைப்படத்தில் கவிஞர் கே.டி.சந்தானம் இயற்றி எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைத்து பி.லீலா, கே.வி. ஜானகி பாடிய ’ஓரிடந்தனிலே நிலையில்லாதுலகினிலே’ என்ற ஒரு அருமையான பாடலை இங்கு பதிவு செய்கிறேன்.

இந்தத் திரைப்படத்தில் கே.ஆர்.ராமசாமி, வி.என்.ஜானகி, பத்மினி நடித்திருக்கிறார்கள். இப்பாடல் காட்சியில் பத்மினியும், ராகினியும் நடனமாடியிருக்கிறார்கள் .

ஓரிடந்தனிலே நிலையில்லாதுலகினிலே
உருண்டோடிடும் பணங்காசெனும்
உருவமான பொருளே (ஓரிடந்தனிலே)

ஊரும் பேரும் தெரியாதவரை
உயர்ந்தோராக்கிடுமே – அது
உயர்ந்தோராக்கிடுமே (ஊரும் பேரும்)

உருண்டோடிடும் பணங்காசெனும்
உருவமான பொருளே (ஓரிடந்தனிலே)

காசு நல்ல காரியம் செய்யாது
கண் மூடித் தூங்கக் கருணை காட்டாது (காசு)

களவு கொலையுண்டாக்கும்
கவலை மிகவும் சேர்க்கும் (களவு)

காமுறு இன்பம் சொந்தம்
எல்லாமே நீக்கும் (ஓரிடந்தனிலே)

1949 லேயே பணம் காசு ஓரிடத்தில் நில்லாது உருண்டோடிடும் தன்மையது என்றும், ஊரும் பேரும் தெரியாதவரை எல்லாம் உயர்ந்தோராக்கி விடும் என்றும் திடீரென்று வரும் காசு பணம் எல்லோரையும் எதிர்காலத்தில் எப்படி மாற்றப் போகிறது என்று தீர்க்கதரிசியாக கவிஞர் சொல்கிறார்.

காசு வருகிறது என்றாலும் சரி, பெருமளவு வந்த பின்னாலும் சரி, வரும் பொருளும், காசு பணமும் நல்ல வழியில் வர வேண்டும் என்றும், நல்ல காரியங்களுக்காக செலவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுச் சொல்கிறார். அப்படி நல்ல காரியங்கள் செய்யாமல் காசு பணம் சேர்த்துக் கொண்டே போனால், கண் மூடித் தூங்கக் கூடப் பயமாக இருக்கும் என்கிறார்.

அடுத்து தவறான வழியில் சம்பாதிக்கும் காசு பணம் எதிரிகளை உண்டாக்கும் என்றும், அதன் விளைவாக களவு, கொலைகளையும் செய்யத் தூண்டி மிகுந்த மனக் கவலையைச் சேர்க்கும் என்றும் சொல்கிறார்.

கடைசியாக காமுறு இன்பம் தேடி, தீய வழியில் சென்று உறுதுணையாய் உள்ள சொந்தங்களையும் பகைத்துக் கொண்டு நீங்க வேண்டி வரும் என்றும் எச்சரிக்கிறார்.

மேலே சொன்ன எல்லாவற்றையும் நாம் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

எனவே காசு பணத்தைச் சம்பாதிக்க தவறான வழியில் யாரும் செல்லாதீர்கள்.

பேராசை கொண்டு லஞ்சம், கமிஷன், ஊழல் என யாரும் அலையாமல் நியாயமாக வந்த காசே நிலைக்கும் என்று திருப்திப்பட வேண்டும்.

இல்லையென்றால் வழக்கு, சிறைத்தண்டனை, அபராதம் என்று அல்லல் பட வேண்டியிருக்கும் என்பது உறுதி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-22, 8:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 76

மேலே