திருப்பழமண்ணிப் படிக்கரை - கலிவிருத்தம் - பாடல் 1

022 திருப்பழமண்ணிப் படிக்கரை, ஏழாம் திருமுறை, சுந்தரர் தேவாரம்
கலிவிருத்தம்
(கூவிளம் தேமாங்கனி புளிமாங்கனி கூவிளங்காய்)

முன்னவன் எங்கள்பிரான் முதல்காண்பரி
..தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திருநீலமி
..டற்றெ(ம்)பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறைநான்கு(ங்)கல்
..லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழமண்ணி(ப்)ப
..டிக்கரையே 1

பொழிப்புரை:

எல்லார்க்கும் முன்னே உள்ளவனும், தனக்கு முன்னுள்ள பொருள் இல்லாதவனும், யாவரினும் தலையாயவனும்,

அழகிய நீலகண்டத்தை உடையவனும், என்றும் அழியாது நிலைபெற்றிருப்பவனும், நான்கு வேதங்களையும் கல்லால மர நிழலிலிருந்து சொல்லியவனுமாய்,

எங்கள் தலைவனுமாய் உள்ள இறைவன் எழுந்தருளியிருப்பது `திருப்பழ மண்ணிப் படிக்கரை` என்னும் தலமே

குறிப்புரை:

`எங்கள் பிரான்` என்பதைப் பெயர்தொறும் வைத்து ஓதினமையின், அதனையும் பொதுத்தன்மை நீக்கிச் சிறப்பிக்கும் பெயராகக் கொள்ளுதல் திருக்குறிப்பாதல் பெறப்படும்;

`பன்னிய எங்கள் பிரான்` என்றதன்பின், `இருப்பது` என்னும் சொல் சொல்லெச்சமாய் மறைந்து நின்றது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-22, 8:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே