மரூஉச்செய் தியார்மாட்டுந் தங்கு மனத்தார் விராஅஅய்ச் செய்யாமை நன்று – நாலடியார் 246

இன்னிசை வெண்பா

பராஅரைப் புன்னை படுகடற்றண் சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? நல்ல
மரூஉச்செய் (தி)யார்மாட்டுந் தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று 246

- அறிவுடைமை, நாலடியார்

பொருளுரை:

பருமனான அடிமரத்தையுடைய புன்னைமரங்கள் உண்டாகின்ற கடலின் குளிர்ந்த கரையை உடையவனே!

நண்பரை ஒருகாற் பிரிதலும் மற்றொருகாற் கூடுதலும்உலகத்திற் செய்யத் தக்கனவோ?

சிறந்த நட்புச் செய்து எத்தகையோரிடத்தும் நிலைத்தொழுகும் மனப்பான்மை உடையோர், முதலிலேயே யாவரோடும் மனங்கலந்து நட்புச் செய்து கொள்ளாமை அதனினும் நன்றாகும்.

கருத்து:

கூடுதலும் பிரிதலுமின்றி ஒழுகுதல் அறிவுடைமையாகும்.

விளக்கம்:

யார்மாட்டுமென்றார், நேரல்லாரையும் அடக்கி,. ஒருவரோடு கூடுதலும் பிரிதலும் செய்து கொண்டிருத்தலினுங் கூடாமையே நன்றென்றபடி,

நல்லமரூஉச் செய்து யார்மாட்டுந் தங்கு மனத்தாரென்றது, தக்கோரெனற் பொருட்டு,

அம் மனத்தார் பின் பிரிதலாற் பெருந் துன்பமுறுவாதலின், அவ்வாறு விதந்தார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jul-22, 7:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே