தபால் அலுவலகத்தின் ஏற்றப்படாத ஒளிவிளக்கு

உழைப்பால் உயர்ந்த உத்தமி பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில், எங்களுடைய
குடும்ப நண்பர் ஒருவரைப்பற்றி நான் இங்கே நிச்சயமாக கூறியாகவேண்டும்.
மிகவும் பெரிய குடும்பத்தில் பிறந்த இந்த பெண்மணி இளமையிலேயே மிகவும்
துன்பங்களை கடந்து வந்தவர். அவருக்கு கிடைத்த கணவன், அவரைப் பற்றி என்ன,
எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. அவர் நிரந்தரமாக ஒரு தொழிலிலும்
இருந்தது இல்லை. அதிகம் படிக்காததால் அவர் பார்த்த வேலைகள் எல்லாமே
திறமை அதிகம் தேவை இல்லாத வேலைகள்தான். தவிர, அவர் மிகவும் வெகுளி
கோபம் வந்தால் யாரையும், தகுதி அந்தஸ்து பார்க்காமல் திட்டிவிட்டு, அவர்
பார்க்கும் தொழிலை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார். மீண்டும் அவர் யாரிடம் ,
எந்த வேலைக்கு, எப்போது செல்வார் என்பது அவருக்கே தெரியாது. இவர்களுக்கு
ஒரே மகன். கணவன் இப்படி இருந்ததால் , இந்த பெண்மணி, குடும்பத்தை காப்பாற்ற
வேறு வழி தெரியாமல் திண்டாடியபோது, தபால் அலுவலகங்களில் தற்காலிக
வேலைகள் இருப்பதை அறிந்து, அதற்கு விண்ணப்பித்தார். அவருக்கு ஆங்கிலமும்
படிக்கத்தெரியும். எனவே, அவருக்கு தபால் நிறுவனத்தில் ஒரு வேலை கிடைத்தது.
வந்த தபால்களை இடங்கள் வாரியாக பிரித்து வைப்பது, வெளியே போகும்
தபால்களை , மாநிலவாரியாக பிரித்து வைப்பது, ஸ்டாம்ப் விற்பது, பிரான்கிங்
இயந்திரத்தை (franking machine) இயக்கி, தபால்கள் மேல் ஸ்டாம்ப் மதிப்பை அடிப்பது
இது போன்ற வேலைகளை அவர் செய்துவந்தார். காலையில் இவர் சிற்றுண்டி
சாப்பிட்டதே இல்லை. காரணம், போதிய வருமானம் இல்லை. இவர் கணவர்
ஏதாவது வேலை செய்கிறாரா என்பது கூட இந்த அருமை பெண்மணிக்கு
தெரியாதாம். அப்படிப்பட்ட ஒரு ஒரு பிறவியாக இருந்தார் இவர் கணவர்.
காலையில் எளிமையாக ஏதாவது சமைத்து வைத்துவிட்டு, இவர் ஒரு சிறிய டிபன்
பாக்ஸில் கொஞ்சமாக உணவு எடுத்துக்கொண்டு, சரியாக காலை மணி
எட்டேமுக்காலுக்கு தபால் அலுவலகம் புறப்பட்டுவிடுவாராம். அவரது கணவன்
எப்போது தோன்றுகிறதோ அப்போது உணவை எடுப்பார். அவர்களது மகன்
ஸ்கூலுக்கும், கல்லூரிக்கும் கூட அம்மா செய்துவைத்த உணவை வீட்டில்
சாப்பிட்டுவிட்டு, ஒரு சிறிய டிபன் டப்பாவில் அம்மாவைப்போலவே கொஞ்சம்
உணவு எடுத்துச்செல்வான். இந்த பெண்மணிக்கு, தபால் அலுவலகத்தில் காலை
ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை கடுமையாக உழைத்துவிட்டு
மீண்டும் மாலை ஐந்தேகால் மணிக்கு வீடு சென்றால் மற்ற எல்லா காரியத்தையும்
பார்க்கவேண்டும். இரவுக்கு சமையலும் செய்யவேண்டும். வீட்டில் வேலைக்காரி
வைக்க வசதி இல்லாததால், அக்கு முதல் ஆணி வரை எல்லாவேலைகளையுமே
இந்த பெண்மணிதான் செய்தாகவேண்டும் என்கிற சூழ்நிலை. கணவன்
,வெளிவேலைகள் ஏதாவது இருந்தால் அதை முடித்து வருவார். அவருக்கும் சரி
அவரது மகனுக்கும் சரி, வீட்டில் ஒரு துரும்பை கூட அசைக்கமாட்டார்கள்.

தபால் அலுவலகத்தில் பிரான்கிங் இயந்திரத்தை மிகவும் அதிகமாக இயக்கியதால்,
இந்த பெண்மணிக்கு கை மற்றும் முதுகு வலி வந்துவிட்டது. இவரின் உயரமும்
மிகவும் குறைவு. எனவே, ஸ்டாம்ப் இயந்திரத்தை இயக்கவும் இவர் மிகவும்
கஷ்டப்படவேண்டியிருந்ததாம். இவர் வேலை செய்த தபால் அலுவலகத்தில் வேலை
செய்த அத்தனை பேர்களும், இந்த பெண்மணிமீது நல்ல மதிப்பும் மரியாதையும்
வைத்திருந்தார்கள்.இருப்பினும் வேலை விஷயத்தில் அவருக்கு யாரும் பெரிய
அளவில் உதவி செய்யவில்லை. மாறாக, இவர் பலருக்கும் உதவியிருக்கிறார்,
நிரந்தரமாக்கப்பட்ட பணியாளர்களின் வேலைகளையும் சேர்த்துதான். இதில்
கொடுமையான விஷயம் என்னவென்றால், இவர் கடைசிவரை தற்காலிக
பணியாளராகவே இருந்து, கை வலி, முதுகு வலி தாளாமல் அவரது
ஐம்பதுஎட்டாவது வயதில் வேலையையே விட்டுவிட்டார். பதினைந்து
வருடங்களுக்கு முன்பு இவர் ஓய்வு பெற்றபோது, இவரது மாதசம்பளம் ரூபாய்
7500/- மட்டுமே. இவருக்கு, எல்லாம் சேர்த்து கிடைத்த ஓய்வுத்தொகை, மொத்தமே
ரூபாய் 25000/- தான். அந்த நேரத்தில், நன்கு படிக்கும் இவரது மகன் பொறியியல்
படிப்பை முடித்துவிட்டு பிஜி படிப்புக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான்.
அப்போது அகமதாபாத்தில் திருபை அம்பானி பல்கலைக்கழகத்தில் அவனுக்கு
மெரிட் ஸ்காலர்ஷிப் கீழ் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. மகனை அகமதாபாத்
அனுப்புவதற்கு இந்த பெண்மணி அவ்வளவு கஷ்டப்பட்டார். நாங்கள் போதிய
பணஉதவி செய்ய முன்வந்தும், ரூபாய் 5000/- மட்டுமே எங்களிடம்
வாங்கிக்கொண்டார். அந்த பணத்தையும் சரியாக ஒரே வருடத்தில், நாங்கள்
எவ்வளவு மறுத்தும், எங்களுக்கு திருப்பி தந்துவிட்டார். இந்த பெண்மணியிடம்
ஒருவர் கற்கவேண்டியது அவரது எளிமை, உழைப்பு, தன்மானம், சுயகௌவரவம்,
எல்லாவற்றை காட்டிலும், அவரது எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் முகம்
மற்றும் பிறருக்கு உதவும் எண்ணமும் அவரது சேவை கரங்களும். யார் வந்து ஒரு
நிகழ்ச்சிக்கு அவரை அழைத்தாலும் , தப்பாமல் சென்றுவிடுவார். தன்னை மதித்து
வந்த ஒருவருக்கு தன்னால் முடிந்தது அது ஒன்றுதான் என்று எங்களிடம் கூறுவார்
இந்த குணமும் பண்பும் கொண்ட பெண்மணி.

இன்று, இவரது மகன் நல்ல வேலையில் இருக்கிறான். நன்றாக சம்பாதிக்கிறான்.
கணவன் மகனுடன் இந்த பெண்மணி சொந்த வீட்டில் (அபார்ட்மெண்ட்)
சௌகாரியமாக வசித்து வருகிறார். வயது எழுபதை கடந்து கொஞ்சம் உடல்
உபாதைகள் இருப்பினும், பொதுவாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவருகிறார். என்
மனைவி என்றால், இந்த பெண்மணிக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் அவ்வப்போது
அவர் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறோம். கிட்டத்தட்ட இருபத்திஐந்து
வருடங்களுக்கு மேலாக எங்கள் தோழமை நீடித்து வருகிறது. மாதம்
ஒருமுறையேனும் இவர் எங்களுடன் தொலைபேசியில் விசாரிப்பார் அல்லது
நாங்கள் இவருக்கு போன் செய்து இவர் நலம் விசாரிப்போம். இவர் கணவர்,
எப்போதுமே சரியான சம்பாத்தியம் செய்ததில்லை. ஆனால் இப்போது, எழுபத்திஐந்து
வயதை தாண்டியபோதும், மிகவும் சுறுசுறுப்பாக,அவருக்கு பிடித்ததை
செய்துவருகிறார். அவருக்கு பிடித்தது சைக்கிள் விடுவது, டிவியில் சினிமா,
கிரிக்கெட் , மெகா சீரியல்ஸ் பார்ப்பது, மனைவி ருசியாக சமைப்பதை ரசித்து
சாப்பிடுவது . இப்படிப்பட்டவர்களை பரப்பிரம்மம் என்பார்கள். அதாவது, யாருக்கு
என்ன நடந்தாலும் இவருக்கு ஒரு கவலையும் இல்லை. வேளாவேளைக்கு
சாப்பிடுவார் , தூங்கிவிடுவார். கணவர் இப்படி இருப்பது, இந்த பெண்மணிக்கு
முதலில் மிகவும் வருத்தத்தையும் கவலையையும் கொடுத்தது . ஆனால்
காலப்போக்கில் ‘நம் விதி’ என்று தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார் இந்த தியாகசீல
பெண்மணி. அவர் அவ்வளவு கஷ்டப்பட்ட நாட்களிலும் சரி, இப்போது நன்றாக
இருக்கும் நாட்களிலும் சரி, நாங்கள் அவர்கள் வீட்டிற்கு சென்றால் ஏதேனும்
தின்பண்டம், ஒன்றும் இல்லை என்றால் காபியாவது கொடுக்காமல், ஏதாவது சிறு
அன்பளிப்பு அளிக்காமல் எங்களை திருப்பி அனுப்பியதே கிடையாது. எவர்சில்வர்
டப்பா, பிளாஸ்டிக் டப்பா இல்லையென்றால் ஒரு ரவிக்கை துணி இதுபோல,
ஏதாவது அவர் என் மனைவிக்கு கொடுப்பார்.நாங்கள் வேண்டாம் என்று சொன்னால்
"நீங்கள் இருவரும் என்னைவிட சிறியவர்கள், பெரியவர்களுக்கு நீங்கள் மதிப்பு
தருவதாக இருந்தால் , நான் கொடுப்பதை தட்டாமல் எடுத்துக்கொள்ளவேண்டும்"
என்று அன்புடன் அங்கலாய்ப்பார். இந்த பெண்மணியை போல நான் வேறு ஒரு
பெண்மணியை இதுவரை வாழ்க்கையில் கண்டதில்லை. இப்போது இவ்வளவு வசதி
இருந்தும், இந்த பெண்மணியால் சிற்றுண்டி சாப்பிட இயலாது. ஏனெனில், முப்பது
வருட காலம் சிற்றுண்டி சாப்பிடாமல் இருந்ததால், அவரது உடல் மற்றும்
பழக்கப்பட்ட முறை, சிற்றுண்டியை ஏற்றுக்கொள்வதில்லை.


மேற்கூறிய அபூர்வ பெண்மணியைப்போல் இன்னும் எவ்வளவோ பேர்
இருக்கிறார்கள். எவ்வளவோ பெண்கள் கணவனை இழந்து, தன் குழந்தைகளை ,
பலவித இன்னல்களுக்கிடையே வளர்க்கிறார்கள்; எவ்வளவு பெண்கள் கணவன்
குறைவாக சம்பாதித்தால், தானும் ஏதாவது வேலை செய்து அல்லது கிடைக்கும்
வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். சமீபத்தில் ஒரு பத்திரிகையில்
படித்தேன், மேற்கு வங்காளத்தில், சுபாஷிணி மிஸ்த்ரி என்ற பெயர் கொண்ட
மிகவும் வறுமையான ஒரு கிராமத்து பெண், திருமணமாகி நோய்வாய்ப்பட்ட
கணவனை காப்பாற்ற போதிய பணமும் மருத்துவமும் கிடைக்காததால், அவரை
பறிகொடுத்துவிட்டு, ஏகப்பட்ட இன்னல்களுக்கிடையில் அவரது நான்கு
குழந்தைகளை வளர்த்தாராம். அதுமட்டும் இல்லை, பணமும் மருத்துவ வசதியும்
இல்லாததால்தான் தன் கணவனை காப்பாற்றமுடியவில்லை என்பதை
தாங்கமுடியாமல், தனது கிராமத்தில் ஒரு ஆஸ்பத்திரி கட்டுவேன் என்று உறுதி
மொழி எடுத்துக்கொண்டு, எப்படியோ கஷ்டங்கள் பல தாங்கி, அவரது ஒரு மகனை
டாக்டருக்கு படிக்கவைத்து, பின்னர் சிறிய அளவில் ஒரு ஆஸ்பத்திரியை தனது
கிராமத்தில் துவக்கினாராம். தற்போது, மாநில அரசாங்கமும் உதவி செய்து அந்த
ஆஸ்பத்திரியை இன்னும் பெரிதாக வசதியுள்ளதாக கட்டியுள்ளார்களாம். எண்பது
வயதை கடந்த இவருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்துள்ளது. நடமாடும் தெய்வம்
எங்கே என்று நாம் தேடவேண்டிய அவசியமே இல்லை. மேலே குறிப்பிட்ட
இருபெண்மணிகளும், அவரவர் வாழ்ந்த வழிகளிலே நடமாடும் தெய்வங்கள்தானே?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (3-Jul-22, 10:14 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே