550 ஞாயிற்றை நடுநிலையில் நாட்டினோன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 8

அறுசீர் விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

பகல்புவி யினும்பல் கோடி
..பங்குமிக் கதுவாம் பூமிக்(கு)
இகலணித் தாயின் யாவும்
..எரிந்துபோஞ் சேணா யிற்பார்
தகவொளி பெறாதென் றுன்னித்
..தக்ககண் நிறுவிச் சுற்றும்
நிகழ்புவ னங்கள் காந்தி
..உறச்செய்தோ னிகரி லானால். 8

– தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

ஞாயிறு உலகத்தைவிடப் பலகோடி மடங்கு பெரியது; அஃது, உலகத்துக்கு நெருங்கியிருக்கு மாயின் உலகம் எரிந்து பாழாய்ப்போகும். தொலைவிலிருப்பின் அதன் ஒளியும் சூடும் பெறாது உலகம் நிலைபேறின்றிக் கெடும்.

இவற்றைத் திருவுள்ளங்கொண்டு பொருத்தமான இடத்து அஞ்ஞாயிற்றை அமைத்து எல்லா வுலகமும் ஒளியும் சூடும் எய்தி அளியொடும் வாழ அருளினவன் ஒப்பில்லா முழுமுதல்வனாவன்.

பகல்-ஞாயிறு. அணித்து-நெருக்கம். சேண்-தொலைவு. பார்-உலகம்.
உன்னி – திருவுள்ளங் கொண்டு. நிகரிலான்-ஒப்பில்லான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-22, 8:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே