கூழ முட்டையில்

நாயின் வாயுள் இருக்கும் நாக்கென
தாயின் வயிற்றுள் துளிர்த்தேன் குழவியாய்
நோயுள் பொதிந்து நோயால் சிதையும்
மாய உடலைப் பெற்றே வளர்ந்தேன்

ஆயக் கலைகளைக் கற்க முனைந்தேன்
பேயாய் பலரிடம் விரைந்தேன் தெளியவே
தூய குருவினை கண்டேன் இல்லை
ஏவிடும் அம்பாய் மாற்றினர் எனையே

நல்லதை சொன்னார் இல்லையே நம்பினோர்
பொல்லா வித்தையை பொய்யாய் ஊட்டினர்
கல்வியை காசுக்கே விற்றிட எண்ணியே
வெல்ல வார்த்தையால் நஞ்சினை கொடுத்தனர்

கற்றக் கல்வியால் வெல்லவே இயலாமல்
குற்றம் செய்ததாய் கூனினேன் குறுகியே
வெற்றியை அடையலாம் என்றே கூறியோனை
பற்றியே நினைத்து தேடினேன் கற்றவிடம்

கூழ முட்டையில் கெட்டவன் அரசியலை
ஆழமாய் கற்றே ஆனான் மந்திரியாய்
ஏழையின் ஏற்றமே இலக்கென கூறியே
பாழாக்க பலவகை நிறுவனம் தொடங்கினான்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (9-Jul-22, 6:40 pm)
பார்வை : 37

மேலே