கல்லென்று தந்தை கழற அதனையோர் சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் – நாலடியார் 253
நேரிசை வெண்பா
கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளா(து) இகழ்ந்தவன் - மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
வழுக்கோலைக் கொண்டு விடும் 253
- அறிவின்மை, நாலடியார்
கழறு urge
பொருளுரை:
இளமையில் தன் தந்தை ‘படி' என்று இடித்துக் கூற அதனை ஒரு நற்சொல் என்று ஏற்காமற் பொருள்செய்யாது விட்டவன், பின்பொருகால், எழுத்தெழுதிய கடிதமொன்றைப் பலர் முன்னிலையில் ஒருவர் இதனைப் படியுமென்று மெல்லத் தன் கையிற் கொடுக்கத் தனக்கு அது மாட்டாமையால் நாணத்தாற் சினந்து கூவி மானத்தால் ஓவென்று அழுதுவிடுவான்.
கருத்து:
அறிவின்மை பலர் முன்னிலையில் மானக்குறைவைத் தரும்.
விளக்கம்:
‘மெல்ல நீட்ட'வென்றார். அஃதவன் சினத்தை யெழுப்புதலின்.
வழுக்கு ஓல் - குறைவினால் உண்டாகும் ஓலம், அழுகை யொலி; அவ்வொலியைக் கொண்டு விடும் என்க.