உடையார் கருமங்கள் கடலுள்ளும் காண்பவே நன்கு - பழமொழி நானூறு 145
நேரிசை வெண்பா
ஒல்லாத வின்றி உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம் - இல்லார்க்
கிடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப!
கடலுள்ளும் காண்பவே நன்கு. 145
- பழமொழி நானூறு
பொருளுரை:
விளங்குகின்ற கடல் நாடனே! பொருள் இல்லாதவர்களுக்கு அவர் தொடங்கிய காரியங்கள் துன்பமாகவே முடியும்;
பொருள் உடையார் செய்யத் தொடங்கிய செயல்கள் முடியாதன இல்லாமல் நன்மையாகவே ஆராயப்பட்டு முடியும்; கடல்தாண்டிச் சென்ற இடத்திலும் செய்யத் தொடங்கிய செயலில் வெற்றியையே காண்பார்கள்.
கருத்து:
பொருள் உடையார்க்கு முடியாத செயல்கள் யாண்டும் இலவாம்.
விளக்கம்:
பொருள் உடையார், இல்லார் என்ற இருதிறத்தார்க்கும் செயல்கள் தாமே முடிதலில் ஒக்குமாயினும், அவர்க்கு நன்றாகவும் இவர்க்குத் தீதாகவும் முடியும் என்பதாம்.
'இடராவியலும்' எனப் பொதுப்படக் கூறவே, செயல்கள்தாம் வெற்றியாக முடியாதொழிதலே யன்றித் தம்மைச் செய்தாரையும் இடர்ப்படுத்தும் என்பதாம்.
'கடலுள்ளும்' என்றது பிற நாட்டின்கண்ணும் என்பதை.
'கடலுள்ளும் காண்பவே நன்கு' என்பது பழமொழி.