ஒழுக்கமிலாதான் உயிர்விடுதல் நன்று – அறநெறிச்சாரம் 133
நேரிசை வெண்பா
ஒழுக்கம் இலனாகி ஓர்த்துடைய னேனும்*
புழுப்பொதிந்த புண்ணிற் கொடிதாம் - கழுக்கிரையை
ஓம்பின்மற் றென்னை உறுதிக்கண் நில்லாக்கால்
தேம்பி விடுதலே நன்று 133
- அறநெறிச்சாரம்
*ஓர்த்துடைய யென்னும்
பொருளுரை:
அறிவு நூல்களை ஆராய்ந்துணர்ந்த அறிவினனே யெனினும் புழுக்கள் நிறைந்த புண்ணினுங் கொடியதும் கழுகுகளுக் கிரையாவதுமாகிய உடலை தீயொழுக்கத்தை மேற்கொண்டு வளர்த்து வருவானாயின் அவன் அவ் வறிவாலடையும் பயன் யாது? நன்னெறிக்கண் நில்லாதவிடத்து அவன் அழிந்து விடுதலே நல்லது
குறிப்பு:
கழுகுக்கிரை என்பது கழுக்கிரை எனக்குறைந்தது. கழுகுக்குன்றம் என்பது கழுக்குன்றம் என வருதல் போல.