நாமுத்துக்குமார் - குறுங்காலம் கவியாண்ட பெருமன்னர்
பாதை முடிந்தாலும் பயணம் முடியா கவிப்பயணியவர்,
குறுங்கால கவியாண்ட பெருமன்னரவர்,
வருங்கால கவிஞர்களின் வழியுமவர்,
சடுகுடு பாடி காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் நினைவூட்டியவர்,
பூக்கள் பூக்கும் தருணத்தை காணச் செய்தவர்,
கவிஞர் யாவரும் மழை கொண்டாட, வெயில் கூடதான் அழகென்று வெயிலோடு உறவாடியவர்,
வானவில்லை போல இளமை கொண்டாடியவர்,
காலங்கள் தீரலாம்
தீராதடி காதல் தமிழ்!
நரை கூடி போகலாம்
மாறாதடி ஆசை தமிழென்று காதலும் தமிழும் ஒன்றென உணர்த்தியவர்,
தன் வாசனை பூ அறியாது கண்ணாடிக்கு
கண் கிடையாது என்று கற்பனையில்
கரை கண்டவர்,
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி என ஆழ அன்புறும் சிந்தயரவர்,
இன்னும் ஒரு ஜென்மம் மண்ணில் பிறப்பேனே,
தந்தை அவன் விரலை தொட்டு பிடிப்பேனே, என தந்தையின் தாலாட்டு பாடி ஆனந்த யாழை மீட்டியவர்,
நெஞ்சம் எனும் ஊரினிலே, அய்யயோ புடிச்சிருக்கு, சுட்டும் விழி சுடர், விழிமூடி யோசித்தால்... போதாது என
ஒரு பாதி கதவில் காதலை கடத்தியவர்,
பெருநாவலர் வள்ளுவன் கண்ட இரு மலரில் ஒன்றெடுத்து அனிச்சம் பூவழகியை பிரசவித்ததை விட வேறென்ன காரணம் வேண்டும் உன்னை ரசிப்பதற்கு!!
சன்ரைஸ் பார்க்காத கண்மணியை(என்னை)
இன்று கவிபாட வைத்தவரே!..
உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை,
உதிரத்தில் விதைத்தாயே கவியின் சொல்லை
தலைவா... தலைவா...