நம்பிக்கை துரோகிகள்-ஒரு பக்க கதை

நம்பிக்கை துரோகிகள்-ஒரு பக்க கதை

அந்த இடத்தில் அவர்களை பார்ப்போம் என்று எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்த பெரிய குப்பை தொட்டி ஒன்று என்னை மறைத்தது போல் இருந்ததால் அவர்கள் என்னை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்
அவர்கள் அருகில் சென்று பார்க்க ஆசை எனக்குள் கிளர்ந்தது, என்றாலும் என் சுய மரியாதை தடுத்தது. ஒரு காலத்தில் அவர்கள் என்னிடம் பழகிய பழக்கம் என்ன? அவர்கள் இந்த ஊரை விட்டு செல்ல விரும்பினார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? இதோ இந்த இடத்திலேயே என்னை கை கழுவி அநாதையாக விட்டு போய் விட்டார்கள்.
இவர்களை நான் போய் கேட்டேனா? எனக்கு உதவி செய்யுங்கள் என்று, இவர்களாக வந்தார்கள், என் அம்மாவிடம் கேட்க கூட இல்லை, ஏதோ இவர்களுக்கு ரொம்ப உரிமையுள்ளவர்கள் போல் என்னை அணைத்தபடியே வீட்டுக்கு கூட்டி வந்தார்கள்.
“மானே தேனே” என்று ஒட்டி உறவாடினார்கள். நம்மை இவர்கள் காப்பார்கள் என்னும் நம்பிக்கையாக நினைத்து தைரியமாக இருந்த நேரத்தில் என்னை இடம் தெரியாத இடத்தில் சேர்த்து விட்டு (சேர்த்துவிட்டு என்று சொல்வதை விட விட்டு விட்டு) நகர்ந்து விட்டார்கள்.
இது பச்சை துரோமல்லவா? இதற்கும் இவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அப்புறம் ஏன் இந்த கெட்ட எண்ணம்? அதற்கு பின் நான் பட்ட கஷ்டங்கள், வசதியாக இருந்தவன் ஒன்றுமில்லாமல் ரோட்டுக்கு வந்தால் எவ்வளவு சிரமாம் என்பது இத்தனை காலத்தில் நன்கு புரிந்து கொண்டேன். அதோடு இந்த துரோகிகளை ஏறக்குறைய மறந்தும் விட்டேன். இரண்டு வருடங்கள் ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் இதோ இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
அவர்கள் காரில் வந்து இறங்கியதை பார்த்து கொண்டிருந்தேன். கார் டிரைவரிடம் ஏதோ சொல்லி இருப்பார்கள் போலிருக்கிறது. அவர் தலையாட்டி விட்டு அவர்களுக்கு எதிர்பக்கமாய் நடந்து வந்தார். அதாவது என்னை நோக்கி. நான் இன்னும் சற்று ஓரமாய் நின்று கொண்டேன். அவருக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. இவர் புதிதாக சேர்ந்திருக்க வேண்டும். பழைய ஆளாய் இருந்தால் என்னை எங்கிருந்தாலும் கண்டு பிடித்து விடுவார்.
அவர் என்னை தாண்டி சென்று கொண்டிருந்தார். என்னை சுற்றி நின்ற என் நண்பர்கள் என்னிடம் விசாரித்தனர், என்ன நண்பா ரொம்ப நேரமாய் அந்த காரையே பார்த்துகிட்டிருக்கே.
இல்லை இந்த கார்ல வந்தவங்க இரண்டு மூணு வருசமா இந்த ஊர்ல காணோம், இப்ப வந்திருக்காங்க, சொன்னேன்.
உனக்கு நல்லா தெரியுமோ?
ம்..ம்..முணூமுணுத்தேன்.
என் முணு முணுப்பிலேயே அவர்கள் புரிந்து கொண்டார்கள். விடு நண்பா பணக்காரனுங்க எண்ணமே இப்படித்தான். வேணுங்கற வரைக்கும் நம்மளை கவனிப்பானுங்க, அவனுங்க காரியம் முடிஞ்சிடுச்சுன்னா கழட்டி விட்டுட்டு போயிடுவானுங்க.
எனக்கு அது கூட வருத்தமா தெரியலை, அதா பாரு காருக்குள்ள உட்கார்ந்திருக்க்கான் பாரு ஒருத்தன், அவனை நினைச்சாத்தான் பாவமாயிருக்கு. இவன் கூட எத்தனை நாள் பழகுவாங்களோ..!
வா பேச்சு கொடுத்து பார்க்கலாம்,
அவங்க வர்றதுக்குள்ள அவன் கிட்ட பேச்சு கொடுத்து பார்ப்போம்,
நண்பர்களுடன் அவனை நெருங்க அவன் பயந்து போய் குரல் கொடுத்தான்.
ஸ்..சத்தம் போடாதே, நாங்களும் உன்னோட நண்பர்கள்தான், இவங்களை நம்பாதே, அவங்களுக்கு வேணுங்கறவரைக்கும் நம்ம கூட பழகுவாங்க, வேண்டாமுன்னு நினைச்சுட்டாங்கன்னா தூக்கி வீடுவாங்க, இது என் அனுபவத்துல சொல்றேன். புரிஞ்சுக்கோ, இவங்களை நம்பி இப்ப ரோட்டுல நிக்கறேன்.
நான் சொல்வதை நம்பாமல் பார்த்தான், நாங்கள் அனைவரும் அவனையே உற்று பார்த்து கொண்டிருந்தோம். அதற்குள் அந்த குடும்பம் எதிரில் இருந்த கடையில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தது.
நாங்கள் சட்டென அங்கிருந்து விலகி சென்றோம், அதற்குள் அந்த கார் ஓட்டுநர் எதிர்புறத்திலிருந்து வேகமாக வந்து கார் கதவை திறந்தார். கெக்கலிப்பு சிரிப்புடன் அவர்கள் காருக்குள் ஏறி உட்கார்ந்ததையும் பார்த்தேன். எனக்கு மனதுக்குள் ஆத்திரம் வந்தாலும் அடக்கியபடி அங்கிருந்து நகர்ந்தேன்.
அப்பொழுது ஏறி உட்கார்ந்த பெண் இந்த பக்கமாய் என்னை பார்த்து விட்டாள். அவள் என்னை அடையாளம் கண்டு பிடித்து விடுவாளோ என்னும் பயத்தில் அங்கிருந்து விலகி ஓட முயற்சிக்க..
அந்த பெண் முன்புறம் உட்கார்ந்திருந்தவரிடம் டாடி..டாடி அதோ அது நம்ம டைகர்.. டைகர்..டைகர்..வெளியே கை காட்டி என்னை அழைக்க..
என்னை கண்ணே மணியே என்று வளர்த்து விட்டு இந்த ஊரை விட்டு கிளம்பும் போது இதோ இந்த தெருவில் அனாதையாய் விரட்டி விட்டு சென்றவர்கள்தானே இவர்கள்.. நான் ரோடு ரோடாக பொறுக்கி சாப்பிட்டு தெரு நாயாய் ஆனதற்கு இவர்கள்தானே காரணம்..
ஆத்திரத்துடன் அவர்களை பார்த்து லொள்..லொள்..குரைத்தேன். ஆக்ரோஷமாய் குறைப்பதாகத்தான் நினைத்தேன், ஆனால் என் தன்னிரக்கம், அன்பு, அவர்கள் மேல் வைத்த நம்பிக்கை, இதற்கு அவர்கள் செய்த துரோகம், இதை நினைக்க நினைக்க என்னுடைய குரைப்பு கடைசியில் அழுகையான ஓலமிடுதலில் முடிந்தது. அங்கிருந்து ஓடினேன்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Jul-22, 12:08 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 250

மேலே