பிணவறை

“திருப்பதி சென்று திரும்பி வந்து திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா” என கம்பீர குரலில் சீர்காழி கோவிந்தராஜன் அன்றைய காலைப்பொழுதினை ரம்யமாக்கி கொண்டிருந்தது. கோவிந்தசாமி ஒரு பால் வியாபாரி. டீக்கடையில் கறந்த பாலினை விநியோகம் செய்ய சைக்கிளில் கிளம்புகிறார். கோவிந்தசாமிக்கு குடும்பம் குழந்தை எனும் யாரும் இல்லை.அவருக்கு சொத்து என இருப்பது இரண்டு கறவை மாடு, ஒரு ஓட்டு வீடு தான். அன்றைய தினம் கறந்த பாலை கடைக்கு கொடுப்பதற்க்காக சைக்கிலாளில் செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மணல் லாரி ஒன்று கோவிந்தசாமி சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விடுகிறார்.

விபத்து நடந்த இரண்டு மணி நேரம் கழித்து போலீசார் வருகின்றனர். கோவிந்தசாமியின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கோவிந்தசாமிக்கு என்று அடையாளம் எதுவுமில்லை. அதாவது ஆதார் அட்டை இல்லை. அப்படி இப்படி என்று கோவிந்தசாமி ஊருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. அந்த ஊர் மக்களும் தகவல் கிடைத்து குட்டி யானையில் ஐம்பது பேர் மருத்துவமனை பிணவறை அருகே வந்து இறங்கினர்.

அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் இருவர் தகவல் கொடுத்த காவல்த்துறை அதிகாரியை சென்று பார்த்தனர். அந்த அதிகாரியோ உடலை உடற்கூராய்வு செய்யணும், அவரோட தகவல் எல்லாம் வேணும் , ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ரேஷன் கார்டு இதெல்லாம் கொண்டு வாங்க என்று சொல்ல, அப்படி எந்த ஒரு விஷயமும் அவருக்கு கிடையாது என்று கூற இரு தரப்புக்கும் அதிர்ச்சி. சரி கொஞ்சம் கவனிச்சு விடுங்க எல்லாத்தையும் பார்த்துகொள்ளலாம் என காவல்துறை அதிகாரி கூறிவிட்டு சென்று விடுகிறார்.

சரி கோவிந்தசாமி உடலை பார்த்துவிட்டு வருவோம் என்று அந்த இளைஞர்கள் உள்ளே நுழைய , வாசலில் இருந்த ஊழியர்கள் தடுத்தனர். கோவிந்தசாமியின் உடல் 13நம்பர் டோக்கன் நாளை மதியம் தான் உடல் கிடைக்கும் என்று கூற விரைவில் வழங்க ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொள்கிறோம். டீ செலவுக்கு காசு கொடுத்துட்டு போங்க மொத்தம் நாலு பேரு இருக்கோம் 2 ஆயிரம் ஆகும் என்று கூற மேற்கொண்டு அதிர்ச்சி.

இப்போது பணம் கையில் இல்லை, காலை வந்து தருவதாக கூறிவிட்டு உள்ளே செல்ல முயன்றனர். அப்போதும் கூட ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டு தான் அனுமதித்தனர். கோவிந்த சாமியின் உடலை பார்த்துவிட்டு வெளியே வந்த இளைஞர்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை.

வந்தவர்களுக்கு டீ வாங்கி கொடுத்துவிட்டு நடந்த சம்பவத்தை கூறுகின்றனர். அனைவரும் அமைதியாக இருந்தனர். கேதம் கேட்க வரும் கூட்டம் பணம் என்றால் என்ன செய்யும்,அனைவருமே கூலி தொழில் செய்பவர்கள் தான். அந்த கூட்டத்தில் இருந்து எழுந்த ஒருவர் “ கோவிந்தசாமிக்கு இருக்குறது அந்த இரண்டு மாடும், ஒத்த வீடும் தான். அந்த வீட்ட ஒன்னும் பண்ண முடியாது. மாட்டை வேணும்னா வித்துட்டு அந்த காச வச்சு எதாவது பண்ணலாம் “ என கூறிவிட்டு அமர்ந்தார்.

அந்த மாட்டை நான் வாங்கிக்கிறேன் காலையில காசு தரேன் என இன்னொருவர் கூறினார். இரவு நெருங்க நெருங்க அனைவரையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு திரும்பினர். காலையில் அந்த மாட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து நடக்க வேண்டியதை பார்ப்பதாகவும், மீதி பணத்தை அடுத்து தருவதாகவும் கூறினார்.

அந்த பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு பிணவறைக்கு வந்தனர். பிணவறையில் வேலை பார்க்கும் ஊழியரிடம் இரண்டாயிரம் கொடுத்துவிட்டு வெளியே வந்தனர். காவல்துறை அதிகாரிக்கு இரண்டாயிரமும் கொடுத்தனர். தற்போது கையில் உள்ளது வெறும் ஆயிரம் ரூபாய் தான். உடலின் பாகங்களை வைத்து எடுத்துச் செல்ல அட்டைப்பெட்டி வாங்கி வாருங்கள் என்று அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூற ஏன் எதற்கு என்று கேட்காமல் கடையில் ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கி வந்தனர். அந்த பெட்டியை கொண்டு போய் அந்த ஊழியர் கொடுக்க இதெல்லாம் தேவை இல்லை, வாங்கிய கடையிலேயே திரும்பி கொடுங்கள் என்று கூறிவிட்டனர். அந்த பெட்டியை பயன்படுத்தாமல் அப்படியே திரும்பி கொடுக்க காசெல்லாம் திருப்பி கொடுக்க முடியாது என கடைக்காரர் மிரட்டும் தொனியில் பேசினார். அரசு மருத்துவமனை அருகே இருக்கும் ஒரே கடை இது தான். அதனால் இந்த அடாவடி விற்பனை , இவர்கள் வைப்பது தான் விலை, இது தான் தரம்.

இப்போது கையில் இருப்பது ஐநூறு ரூபாய் இதில் ஆதார் பிரச்சனையை தீர்க்க வேண்டும், கோவிந்தசாமி உடலை மின் மயானத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வேண்டும். ஆம்புலன்ஸ் அரசு சார்பில் இலவசம் என்றாலும் அவர்களுக்கும் கை செலவிற்கு பணம் வேண்டுமாம். இரண்டாயிரம் ரூபாய் கேட்கிறார்கள். அந்த இளைஞர்களுக்கு குழப்பம் அடுத்து என்ன பண்ணுவதென்று, அப்போது பிணவறை ஊழியர் ஒருவர் வந்து அடுத்து உங்க ஊர்க்காரர் பாடி தான் என கூறினார். யோசித்துக்கொண்டிருந்த அந்த இளைஞர் காவல்துறை அதிகாரியிடம் சென்று “சார், சொல்றேன் தப்பா நெனைக்காதீங்க கோவிந்தசாமி பாடிய ஆஸ்பத்திரிக்கே கொடுத்துருங்க. எங்கனால முடியல தொட்டது எல்லாத்துக்கும் காசு கேக்குறாங்க கேட்டா அரசு ஆஸ்பத்திரியில எல்லாம் அப்டி தான்னு சொல்றாங்க, அவ்வளவு செலவு பண்ண எங்ககிட்ட காசு இல்ல.நாங்களும் தினக்கூலி தான். உங்களுக்கு கொடுத்த காசு உள்ள கொடுத்த காசு எல்லாமே,பிணவறையில கிடைக்குற கோவிந்த சாமி மாட வித்த பணம் தான், இந்த நிலமையில எங்கனால எதுவும் பண்ண முடியல மன்னிச்சுக்கோங்க” என கூறிவிட்டு அவர்களும் சென்றனர்.
மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்காக கோவிந்தசாமி உடல் மட்டும் பிணவறையில் காத்திருக்கிறது...

எழுதியவர் : சேவற்கொடி செந்தில் (20-Jul-22, 9:22 pm)
Tanglish : pinavarai
பார்வை : 173

மேலே