பறவைக்கும் சுங்கம்

நெருஞ்சி முள்ளு நிறைந்திருக்கும் சிறந்த மனசு உனக்கு
குரங்கு போல தாவுகின்ற கோளாறு குணமும் இருக்கு
பருத்தி நூலை பட்டாய் விற்கும் திறமையும் இருக்கு
உரித்தத் தோலை ஒட்டிச் சேர்த்த உண்மையை மறைத்து

வார்த்தைக் கொண்டு வனைந்து வைப்பாய் வனப்பான பொருளை
ஆர்த்தெழும் அலையைப் போலே சிறப்பு செய்வேன் என்று
சேர்த்த பொய்யின் சொல்லினால் கனிவைப் பொழியும் உனக்கு
ஊர்காக்கும் நல்வீரன் என்று சுற்றம் புகழ்வது எதுக்கு

பறந்து செல்லும் பறவைக்கும் சுங்கம் விதிக்கும் நினைப்பு
கறந்த பாலை காம்பில் ஏற்ற இயலுமோ உனக்கு
சிறந்த வேந்தன் என்றச் சொல்லும் பொருந்துமோ உமக்கு
வெறுப்பை மிகுதியாய் கொடுப்பதால் என்ன பெருமை உனக்கு

காலம் நேரம் கனிந்து வந்தால் களையுமே கணக்கு
வேலனிடம் சிக்கிக் கொண்ட சிவனாய் மாறும் நினைப்பு
காலைக் கவ்விய முதலைப் போல முடிந்திடும் பொறுப்பு
ஆலம் மரத்தின் அடியில் முளைத்த செடியென முடிவு .
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Jul-22, 10:39 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 50

மேலே