காற்று விடு தூது
புயல் அடித்தால் கதரிவிடும்
புதுமலரின் ஓசையை போல்
குலமகள் அவள் படும்துயரை
கேட்டு காற்று தூது வரும்
செங்கதிர் வான் கரம் பிடித்து
சிலையென அவர் நிலைமறந்த
இணைப்பிரியா நாளையெல்லாம்
நினைத்து காற்று மிதந்து வரும்
மான்விழியாள் மங்கை அவள் - ஏன்
மனதில் புயல் சூடி நின்றாள்?
விரைந்து சென்ற அம்பினை போல்
வில்லை ஏன் விலகி நின்றாள்?
காரிகையாள், கண்ணீர் கொண்ட
தூரிகையால் ஏன் உனை துடைத்தாள்?
கேட்கும் காற்றின் கேள்விக்கெல்லாம்
கோமகனிடத்தில் மொழியில்லையே
நிலமகளின் நிலை குறித்து
சொல்ல துணிந்தது காற்று - அவள்
நிலை உணர்ந்து உடைந்து விட
தலைவன் மனம் முழுதாயில்லையே
- விஷ்ணு

