அன்னலட்சுமி

கொசுவத்தை வாரிசுருட்டிக்கிட்டு
சமையலறையில்
சாமான்களை கடகடவென கழுவினாள்.
பெரிய வெங்காயம் தக்காளி
பொடியாய் நறுக்கி வைத்தாள்.
பூண்டு...இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக்கி
தனித்தனியே அரைத்து விழுதாக்கி கொண்டாள்.
பட்டை...இலவங்கம்...ஏலக்காய்...
மூன்றையும் வெயிலில் காயவைத்து
பொடியாக அரைத்து வைத்துக்கொண்டாள்.
பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி
சூடேறியவுடன் நெய்யைவிட்டு..
ஒடித்த முந்திரியை பொன்முறுவலாய்
வறுத்து தனியாய் வைத்துக்கொண்டாள்.
மீண்டும் நெய்யோடு எண்ணையையும் சேர்த்து
சூடாக்கி அதில்
பட்டை...இலவங்கம்..
ஏலக்காய்..சோம்பு..
பிரிஞ்சிஇலை...அண்ணாசிப்பூ...
ஜாதிக்காய்...மராத்தி மொக்கு ...
எல்லாம் போட்டு கிளறினாள்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து
' கோல்டன் பிரவுன் ' நிறம் வரும்வரை வதக்கினாள்.
தக்காளியைச் சேர்த்து குழையும்வரை கிண்டினாள்.
இஞ்சி...பூண்டு விழுதையும் சேர்த்து
பச்சை வாசம் போகும்வரை வதக்கி..
கீறின பச்சை மிளகாய்...
மல்லி, புதினா தழை சேர்த்து..
அளவாய் உப்பு..மல்லி..மிளகாய் தூள் சேர்த்து..
வெட்டிய கோழி துண்டுகளை அதில் சேர்த்து
மெல்ல கிளறி..
பொடித்துவைத்த மசாலாப்பொடியையும் சேர்த்து
தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு
ஒரு கொத்தி வந்தவுடன்
ஊறவைத்த ' இந்தியா கேட் ' பாசுமதியை
சேர்த்து மெல்ல கிண்டிவிட்டு
இறுக்கமாய் மூடிவைத்து..
அரைவேக்காடாய் இறக்கி பின்
சூடேறிய தோசைகல்லின்மேல் வைத்து
சிறிது நேரம் ' தம் ' வைத்து
இறக்கினாள்.
வீடே மணக்க மூடியை திறந்து
வறுத்த முந்திரியையும் கொஞ்சம்
மல்லி தழையையும் தூவி விட்டாள்.
ஒழுகிய வியர்வையை துடைத்துக்கொண்டு
'அம்மா பிரியாணி ரெடி' என்று சொல்லிவிட்டு
அவசர அவசரமாய் ஓடினாள்
அன்னலட்சுமி.
வீட்டில் காத்துக்கிடக்கும்
பிள்ளைகளுக்கு
கஞ்சி காய்ச்சுவதற்கு....

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (30-Jul-22, 5:48 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 49

மேலே