அனுபவம் 5 குழந்தையுள்ளம்

காலை நடை முடித்து வீடு திரும்பிய தருணம்.
வாகன நெரிசலற்ற வீதி காண மனதுக்கு நிறைவாயிருந்து.
காற்றில் சலசலத்த இலைகள் பார்வையை ஈர்க்க தளர் நடையுடன் வீதியிலிருந்து இருப்பிடம் நோக்கித் திரும்பிய கணம்.
அதி வேகத்துடன் கூடிய உயர்ரக காரொன்று கிறிச்சிட்டு தரித்தது.
இறங்கிய பெண் மிகு நாகரீக உடையுடன் தடுக்கி விழ தயாராக உள்ள நிலையில் தத்தித் தத்தி உயர்குதிக்கால் காலணியுடன் கையில் ஒரு சிறுவனைத் துணையாகப் பிடித்தபடி இறங்கினார்.

முன்னோக்கி அவர் விரைய பின் அச்சிறுவன், (ஐந்து வயதிற்குக் குறைவாகத்தான் இருக்கும்) தயங்கித் தள்ளாடி தூக்க கலக்கத்துடன் பின்தொடர்ந்தான் அருகேயுள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு.

வேளைக்கு வந்துவிட்டதால் காப்பகம் இன்னும் திறக்கப்படாத நிலையில் காத்திருந்தனர் அமைதியாக. அவன் தன் கையிலிருந்த டைனோசர் பொம்மையைத் தடவித் தடவி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தான்.
அருகிலிருந்த பெண் அதைச் சட்டை பண்ணாது கைக் கடிகாரத்தை உற்றுப்பார்த்துவிட்டு கதவினுட்புறம் பார்வையை சுழலவிட்டுக் கொண்டிருந்தார்.

வழமையாக இது போன்ற காட்சிகள் ஆள்மாற்றுகையுடன் காண்பது தான் இருந்தாலும் இன்று மனதியில் ஏனோ இடம் பிடித்துக் கொண்டது.

பாடசாலை விடுமுறை இங்கு கோடை காலத்திலேயே நீளம். அப்படியொரு காலத்திலும் வீட்டில் தரித்திருக்க முடியாமல் அதிகாலையில் துயிலெழுந்து தூக்க கலக்கத்துடன் தாய் பிரிந்து செல்லத் தயாராக இருக்கும் நிலையில் குழந்தை காப்பகத்தின் வாயிலில் காத்திருக்கும் அச்சிறுவன் மனதை நிறைத்தான்.

வசதி,வாய்ப்பு வாழ்க்க்கைத்தரம் எது கூடிய போதும், எதுவும் அந்தக் குழந்தை மனதின் எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்திருக்குமா எனத் தோன்றிக் கொண்டேயிருந்தது எனக்கு.

முதற்கணம் காப்பகத்தைக் கடக்கும் போதெல்லாம் நான் ரசிக்கும் குழந்தைகள் விளையாட்டு ஊர்திகள் என் கண்களைப் பனிக்க வைத்தன.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (5-Aug-22, 3:23 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 74

மேலே