கண்சொரீஇ இட்டிகை தீற்று பவர் - பழமொழி நானூறு 158
நேரிசை வெண்பா
மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு, செய்ம்மினென் பாரே - நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர். 158
- பழமொழி நானூறு
இட்டிகை - செங்கல்
தீற்று: தின், to feed by small mouthful, ஊட்டுதல்.
பொருளுரை:
மறுமை என்பது ஒன்று உளதோ? மனம் விரும்பியவற்றை எல்லாம் அடையும் தன்மையைச் செய்யுங்கள் என்று உபதேசிப்பவர், நல்ல நெய்யுள் தோய்க்கப் பெற்றுப் பாகு கலந்த அடையை உண்ணாமல் நீக்கி, கண்களை மூடிச் செங்கல்லை உண்ணச் செய்பவரோடு ஒப்பர்.
கருத்து:
அறிவில்லார் நன்னெறி யிருக்க, தீநெறியைப் போதிப்பார்கள்.
விளக்கம்:
இம்மையில் நாம் செய்யும் செயல்களுக்குத் தக்கவாறு மறுபிறப்பு உண்டு என்பதை அறியாராய், மறுபிறப்பு இல்லை யென்பதை உபதேசிப்பர்.
மறுபிறப்பு இல்லையென்றால் நல்வினை தீவினைக்கு அஞ்சவேண்டுவதில்லை. ஆகையால் மனம் போனவாறே செய்க என்று உபதேசிப்பர்.
'கட்டி அடையைக் களைவித்துக் கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர்'என்பது பழமொழி.