அறவுழி நோக்கித் திறந்தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்றாம் - பழமொழி நானூறு 159

இன்னிசை வெண்பா

அறஞ்செய் பவர்க்கும் அறவுழி நோக்கித்
திறந்தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்றாம்;
புறஞ்செய்யச் செல்வம் பெருகும் அறஞ்செய்ய
அல்லவை நீங்கி விடும். 159

- பழமொழி நானூறு

பொருளுரை:

செல்வத்திற்கு வேண்டும் புறச்செயல்களைச் செய்ய அதனால் செல்வம் வளரும், அறங்களைச் செய்ய அதனால் பாவங்கள் பற்றுதலைவிட்டு ஒழியும்,

ஆதலால், அறங்களைச் செய்கின்றவர்களுக்கும் அறஞ்செய்யும் இடத்தை ஆராய்ந்து செய்யும் கூறுபாட்டை அறிந்து செய்தால் செல்லுகின்ற மறுமையுலகில் இன்பமுண்டாகும்.

கருத்து:

அறஞ்செய்வார் இடனும் செய்யும் கூறுபாடும் அறிந்து செய்க.

விளக்கம்:

அறவுழி நோக்கித் திறந் தெரிதலாவது, வறியோரை அறிந்து, அவர்க்கு வேண்டுவன வேண்டியாங்கு அளித்தல். 'செய்தக்கால் நன்றாம்,

எனவே, இடனும் திறனும் அறிந்து செய்யாதவழி நிரயத் துன்பம் உண்டாம். அது மீன் பிடிப்பானுக்குத் தூண்டில் வாங்கக் காசு கொடுத்ததை யொக்கும்.

புறம்செய்தலாவது குறியெதிர்ப்பை நாடிக் கொடுத்தல், இடையூறு நீக்கிக் காவல் செய்தல் போல்வன.

'நீங்கி விடுத' லாவது தனக்குப் பகையாகிய அறம் வளர்தலானே தான்மெலிந்து நசித்துப் போதல். 'அல்லவை தேய அறம் பெருகும்' என்பதே இது.

'அறஞ் செய்ய அல்லவை நீங்கிவிடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Aug-22, 9:07 am)
பார்வை : 62

மேலே