வைகலும் ஈண்டின் பெரிதும் பெருவாய்த்தாய் நிற்கும் - பழமொழி நானூறு 160

இருவிகற்ப நேரிசை வெண்பா

வருவாய் சிறிதெனினும் வைகலு மீண்டின்
பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும் - ஒருவா(று)
ஒளியீண்டி நின்றால் உலகம் விளக்கும்
துளியீண்டில் வெள்ளந் தரும். 160

- பழமொழி நானூறு

பொருளுரை:

விண்மீன்கள் ஒன்றுகூடி நின்றால் ஒருவகையாக இருள் நீங்க உலகத்தினை விளங்கச்செய்யும். மழைத்துளிகளும் இடைவிடாது ஒன்று சேர்ந்தால் கடலைப் போல் மிகுந்த நீரைத் தரும்.

அவைபோல, ஒருவனுக்கு பொருள் வருவாய் சிறிதாயினும் நாடோறும் சோர்வின்றிப் பணிசெய்து சிறிதாயினும் சேர்த்து வைப்பின் மிகவும் பெரிய அளவினை உடையதாக ஆகும்.

கருத்து:

வருவாய் சுருங்கியதாயினும் நாடோறும் சிறிது சிறிதாகச் சேர்த்துவைத்தால் செல்வம் வளர்ந்து பெரிதாகும்.

விளக்கம்:

வருவாய் - வரவுகட்கான ஏது, இது வருகின்ற பொருள்.

'ஒளியீண்டி நின்றால் உலகம் விளக்கும், துளியீண்டில் வெள்ளம் தரும்' என்பன பழமொழிகள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Aug-22, 11:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே