எத்துணை யானும் இயைந்த அளவினால் சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர் – நாலடியார் 272

நேரிசை வெண்பா
(’த்’ ‘ற்’ வல்லின எதுகை; ‘ரு’ ‘ழி’ இடையின எதுகை)

எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர்; - மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள் 272

- ஈயாமை, நாலடியார்

பொருளுரை:

எவ்வளவு குறைந்ததாயினும் தமக்கிசைந்த அளவினால் சிறிய ஈதலறத்தைச் செய்தார் பிறவிப் பயனில் முற்படுவர்;

மற்றபடி, பெருஞ்செல்வம் எய்தினால் அறம் என்பதைப் பின்பு கருதுவோம் என்றிருப்போர் பிறர் பழிக்கின்ற துன்பக்கடலில் வீழ்ந்து அழிந்தவராவர்.

கருத்து:

அறஞ் செய்யாதவர் இன்னற் கடலில் அழுந்தியவராவர்.

விளக்கம்:

‘எத்துணையானும்' எனவும், ‘இயைந்த அளவினால்' எனவும், ‘சிற்றறம்' எனவும் சிறுமைப் பொருள் தோன்றப் பலவுங் கூறியது மிகச்சிறிதாயினும் என்றற் பொருட்டு;

‘கடலத்துள்' என்றார் நிறைந்த துன்ப வாழ்க்கையில் என்றற்கு;

மீண்டும் தலையெடாமையின் ‘அழிந்தார்' எனப்பட்டது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Aug-22, 10:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே