மாரி கூப்பிடறான்
மாரி கூப்பிடறான்
மாரியம்மாள் தன் தோளில் மாட்டியிருந்த ஸ்கூல் பை அங்கும் இங்கும் ஆட தன் தோழிகளிடம் சுவாரசியமாய் ‘ரசினிகாந்த் படத்தில் எப்படி ஸ்டைலாக நடித்தார்” என்று சொல்லிக் கொண்டு வந்தவள் ‘கூர் முக்கு திருப்பம்’ வந்ததும் சட்டென்று அமைதியானாள். அவளின் பார்வை அனிச்சையாய் ‘கூர் முக்கின்’ மூன்று கல் மேடைகளை தானாக பார்த்தது.
அப்பன் ரங்கன் தண்ணி போதையில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான், அந்த ‘கூர் முக்குல மாரி உட்கார்ந்து என்னை கூப்பிட்டுகிட்டிருக்கான்’ இதை இரண்டு மாதமாக சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் சொல்வதை குடிசையில் யாரும் கண்டு கொள்வதில்லை என்றாலும் மாரியம்மாளுக்கு இப்பொழுதெல்லாம் ஸ்கூலுக்கு போகும்போது அந்த கூர் முனையை தாண்டும்போது பயம் வந்து விடுகிறது. அந்த கல் மேடையில் உட்கார்ந்து மாரி இவளையே பார்த்து கொண்டிருப்பதாக.
மாரி செத்து போய் மூன்று மாதம் இருக்குமா? அப்பனோட சோக்காளி, இரண்டு பேரும் அந்த கல்லு மேடையில உட்கார்ந்து அரட்டை அடிச்சிகிட்டிருப்பாங்க. மாரியம்மாள் தன் ஸ்கூல் கூட்டாளிகளுடன் அந்த கூர் முக்கை கடக்கும்போதெல்லாம் உங்க அப்பன் அங்க உக்காந்து கதையடிசிச்சுகிட்டிருக்கு பாரு, என்பார்கள்.
வயலுக்கு போவோர், பஸ்ஸுக்கு போவோர், காலை அந்த பாதை பரபரப்பாய் இருந்தாலும், எதை பற்றியும் கவலைப்படாமல் இருவரும் எதையோ பேசியபடி உட்கார்ந்திருப்பார்கள்.
அம்மா இவள் ஸ்கூலுக்கு கிளம்பும்போது ஏண்டி உங்கப்பன் அந்த முக்குல உட்காந்த்திருந்தானா வந்து கஞ்சிய குடிச்சுட்டு போய் உக்கார சொல்லு, நான் தோட்டம் போய்ட்டு வாறேன், மாரியம்மாள் கிளம்பும் முன் இவள் தென்புரத்து சாலையில் நடந்து சென்று விடுவாள்.
மாரியம்மாள் அந்த முக்கு வந்தவுடன் அங்கு நின்றவாறே “அப்போவ் அம்மா உன்னைய கஞ்சிய குடிச்சுட்டு போக சொன்னா” கூவி சொல்லியபடி தன் கூட்டாளிகளுடன் கதை பேசியபடி போய் விடுவாள்.
ரங்கனுக்கு அவள் சொன்னது காதில் விழுந்ததா என்பது தெரியாது, அனிச்சையாய் அந்நேரம் எழுந்து வேட்டியை உதறி விட்டு சரி மாப்பிள்ளை போய் கஞ்சிய குடிச்சுட்டு வந்துடறேன், மள மளவென குடிசையை நோக்கி கிளம்புவான். மாரி டேய் இரு, நானும் வாறேன், பிடிவாதமாய் இவனுடன் வந்து அவனும் ஒரு தட்டு கஞ்சியை குடித்து விட்டுத்தான் கிளம்புவான்.
ரங்கனின் மனைவிக்கும், மாரியும் வந்து குடிப்பான் என்று தெரிந்தே சட்டியில் நிறைய வைத்து விட்டுத்தான் சென்றிருப்பாள்.முறையில் மாரி இவளுக்கு சகோதரன் முறை, பங்காளி கூட்டம். வெல்லம் வியாபாரம் செய்து கொண்டிருந்தவன், ரங்கனுடன் சேர்ந்து தரகு வியாபாரத்தில் சேர்ந்தான், வெல்லம் வியாபாரத்தை விட்டு விட்டு.
ஆரம்பத்தில் இருவருமே காசு பார்த்தார்கள், போகப்போக காசு நிறைய கூட்டாளிகளை சேர்த்து விட்டது. கூட்டாளிகளுக்கு சாயங்காலம் ஆனா சந்தோஷம் தேவைப்பட்டது.
மாரியையும் ரங்கனையும் வைத்தே ரங்கன் மனைவி சண்டை போட்டாள், இரண்டு பேரும் காசை கரச்சு நடுத்தெருவுக்கு கொண்டு வந்துடுவீங்க, அவள் கத்தலுக்கெல்லாம் ரங்கன் அசையவே இல்லை. தரகு வருமானம் அவன் “அண்டர்வேரில்” சுருண்டு கிடக்க, நோட்டு நோட்டாய் எடுத்து கரைத்து விட்டான். ரங்கனும் தன் பங்குக்கு செலவு செய்ய இரண்டு வருசத்துக்குள் கூட்டாளிகள் காணாமல் போயிருந்தார்கள், இவர்களின் கையில் ஒன்றுமில்லை என்றானபோது.
இருந்த அரை ஏக்கரா தோட்டத்தை கெட்டியாக பிடித்து கொண்ட ரங்கனின் மனைவி செல்லாத்தாள், அவனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாள். அவள் தோட்டத்தில் வேலை இருந்தாள் செய்வாள், கூலிக்கு பக்கத்து தோட்டத்து வேலைக்கும் போய் வருவாள்.
மாரி ஸ்கூலு விட்டு வந்தாலும் குடிசையில் இருப்பதில்லை, பக்கத்து கூட்டாளிகளுடன் நொண்டி விளையாட, பல்லாங்குழி விளையாட போய் விடுவாள், அம்மாக்காரி அவளை “உங்கப்பன மாதிரி ஊர் மேஞ்சு” திரியறயே என்று கத்தி கூப்பாடு போடும் வரை வெளியில்தான் சுற்றி கொண்டிருப்பாள்.
முன் திண்ணையில் தண்ணீர் மிதப்பில் ரங்கன் தனக்குள் பேசியபடி உட்கார்ந்திருப்பான். இருட்டு ஆரம்பித்தாலும் உள்ளுக்குள் வரமாட்டான். மாரியோ, செல்லாத்தாளோ தட்டில் சோற்றை கொண்டு வந்து திண்ணையில் வைத்தால் சாப்பிட்டு அங்கேயே தொட்டி தண்ணியில் கையை கழுவி கொள்ளுவான்.
மாரி செத்து போனது இவனது மனதுக்குள் ஒரு அதிர்ச்சிதான். அதுவும் கிணத்துல விழுந்துட்டான் என்று அக்கம் பக்கம் சொன்ன போது ஆடி போய் விட்டான்.
நிறைய காசை தொலைத்து விட்டதாக மாரியின் சம்சாரமும் அவன் மகன்களும் தினமும் சண்டை பிடிப்பதை இவனிடம் சொல்லி அழுதிருக்கிறான். நிறைய தடவை பசிக்கு சோறு கேட்ட போது அவனை விரட்டியதையும் சொல்லியிருக்கிறான்.
செல்லாத்தாளுக்கும் அதிர்ச்சிதான், கணவனை ஏசினாள் “பாரு அவன் நிலைமையை” பேசாம வெல்லம் வித்துகிட்டு திரிஞ்சான், இப்ப உன்னால அவனும் நாசமாகி, நீயும் நாசமாகி பொட்டபுள்ளைக்கு எதுவும் வைக்காம என்னையும் இப்படி நட்டாத்துல விட்டுட்டியே”
இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் ரங்கனுக்கு மாரியின் ஞாபகம் இருந்து கொண்டே இருந்தது, “என்னை மாரி கூப்பிடறான்” சொல்லியபடியே சாராய போதையில் உளறிக்கொண்டே இருப்பான்.
தோள் பை அங்கும் இங்கும் ஆட குடிசை வாசலுக்கு முன் இருந்த சந்தில் அவளது கூட்டாளிகள் பிரிந்து சென்று விட இவள் ஒரு பாட்டை சத்தமாக பாடியபடி அழுத்தி சாத்தியிருந்த குடிசை கதவை திறந்தாள். அப்பன் அசையாமல் திண்ணையில் படுத்து கிடந்தான். மாரி செத்த பின்னால் ‘கூர் முக்குக்கு’ இவன் போவதில்லை, எந்நேரம் திண்ணைதான்.
உள்ளே போனவள் அம்மா ஏதாவது செய்து வைத்திருக்கிறாளா என்று ஒவ்வொரு சட்டியாக திறந்து பார்த்தாள். சோறும், குழம்பும் செய்து வைத்திருந்தது. என்ன அப்பன் எடுத்து போட்டு சாப்பிடலையா? நிறைய இருக்கிறதே? சந்தேகத்துடன் “அப்போவ் மதியானம் சோறு உங்கையிலயா? அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை.
சரி நாமளே கொடுக்கலாம், சட்டியில் இருந்த சோற்றையும் குழம்பையும் ஒரு தட்டில் போட்டு எடுத்து வெளியில் வந்தவள் திண்ணையில் படுத்திருந்த தகப்பனை “அப்போவ்”அப்போவ்” தட்டி எழுப்பினாள்.
அசைவில்லாமல் கிடந்தான் ரங்கன், அவன் உடலின் மேல் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன.
செல்லாத்தா மார்பில் அடித்து அழுது கொண்டிருந்தாள் “மாரி கூப்பிடறான், கூப்பிடறான்னு சொல்லிகிட்டிருந்தியே”