தாயின் தாலாட்டு

தாலேலோ தாலேலோ, தாயின் தாலாட்டு

தாலேலோ தாலேலோ
இது ஒரு தாயின் தாலாட்டிது
தாலேலோ தாலேலோ,
தாயின் உயிரைக் குடித்து
தவமாய் தவமிருந்து, தண்ணீரில் மிதந்தாய் தாலேலோ;
தள்ளாடி உன்னை வயிற்றில் தாங்கி
அன்னையும் நடந்திட
கற்பப்பையில் பத்துமாதம் தங்கியிருந்தாய் தாலேலோ;

முன் வயிறுவிரிய,முனகிய படியே இருந்திட
முழு பூசணியாய் வளர்ந்தாய் தாலேலோ;

காதோடு காது பேசி, கட்டழகே உன்னைத் தாங்கி,
விரைந்தே நீ வெளி உலகத்திற்கு வந்திட
உயிர் துடித்தாள் தாலேலோ;
உயிர் துடித்தாள் … தாலேலோ

எத்தனையோ விரதம் இருந்து,
எட்டுப் பத்து பத்தியம் இருந்து,
சிட்டே உன் முகம் காணத் துடித்தாளே தாலேலோ;

கட்டழகே நீ வளர்ந்து,
கண்ட சுகம் அவள் மறந்து;
கருப்பையை விட்டு கதறியே நீ வந்திடவே,
கண்ணீர் விட்டு கதறியே,
கண்டு விட்டாள் உன் முகத்தைத் தாலேலோ;

கதறியே வந்தவளே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
அன்னை மடியிது
அள்ளி அணைத்த பொன் உடம்பிது
ஆடியே விளையாடிடு தாலேலோ;

அன்னையின் கருணைவிழியிது
அள்ளித் தூவிய பாசமிது;
சொல்லத் தெரியாத பரிசமிது,
சிரித்த முகமுமது,
சிறைபோன அன்னை உயிரிது, தாலேலோ

சிறு குறும்பை சுவைத்து விட்டாள்
சினுங்கும் உன் சிங்கார விழிகள் அறிந்து
சிட்டாய் வந்து சுவைத்திட பால் தந்தாள் தாலேலோ;

பொக்கை வாயால் நீ சிரிக்க,
பொக்கிசமே நீ என்று
அள்ளித்தான் எடுத்து
ஆனந்த கண்ணீருடன்
முன் நெற்றியில்
மூன்று முத்தம் இட்டாள் தாலேலோ;

பகல் இரவு பாராது,
அன்னைக்கு அன்னயாய் அன்பின் அன்பாய் அல்லித் தண்டே உன்னை அணைத்து சீரும் சிறப்புமாய் வளர்த்து விட்டாள் தாலேலோ;

உடலில் சுமந்து, உயிரை பகிர்ந்து
தெய்வமாய் உருவம் தந்து ,
தன்னையிவள் வதைத்துவிட்டு,
உன்னை அவள் வளர்த்து விட்டு,
அன்னை இவள் தன்னை மறந்துவிட்டு,
உலகை அவள் துறந்துவிட்டு
உன்னையிவள் தூங்க வைத்து,
தாங்கியே வளர்த்து வந்தாள் தாலேலோ;

சொந்த மென்று நீ இருக்க,
சொல்லாமல் வந்த சுரத்திற்காக
நெஞ்சம் மது துடித்திடவே துவண்டுவிட்டாள், தாலேலோ;

உன் அழுகுரலைக் கேட்டு
அணைத்தபடியே பாசத்தோடு அமர்த்திவிட்டு, அழகான உன் கன்னத்தில்
ஆயிரம் முத்தம் தந்தே தூங்க வைத்தாள் தாலேலோ

விட்ட உன் மூச்சுக்காத்தை
முழு ஆசையுடன் தான் வாங்கி
விழுந்து கிடந்து விட்டாள் உன் காலடியில்;
விளையாட்டுக் காட்டியே தூங்க வைப்பாள் தாலேலோ;

தொடும் உணர்வில் உன்னை பிடித்து
தொட்ட விரலைத்தான் வாயில் வைத்தே
தொலைத்து விட்டாள் தன் உயிரைத் தாலேலோ;

பட்ட கடன் இது அன்றோ;
பாச மழையும் இதுவன்றோ;
உன் முகத்தைப் பார்த்து பார்த்தே செவிலியாய் சேவை செய்து விட்டாள்,
உன் பாசத்திலே நனைந்தே தாலேலோ;

உயிரோவியமே உடம்புக்குள் பொற் சிலையாக உன்னை வடித்து, உயிரையும் தந்து விட்டாள் தாலேலோ;

சிறந்த கண்களில் சினத்தை நீ காட்ட
கன்னம் சிவந்திட பல முத்தம் தந்து
விளையாட்டு வேடிக்கை காட்டியே
சிற்றெறும்பே சீனி சக்கரையே உன்னை சிரிக்க வைப்பாள் தாலேலோ;

அன்னையின் அன்பு சொட்டும் கருணை மழையது;
அன்னையின் அன்பு அது அடித்து செல்லாத வெள்ளமது;
அன்னையின் அன்பு கட்டிக் கரும்பது; தித்திக்கும் தேனுமது;

அல்லி தண்டே நீ அடி எடுத்து வைக்கும் போது
கால்கள் நோவுமுன்னு கண்ணீர் வடித்து
பாதத்தை பத்திரமாய் எடுத்து முத்தத்தால் ஒத்தனம் இட்டு,
கற்கண்டே கண்ணும் கருத்துமாய் வளர்த்தாளே தாலேலோ;

பாசப் பயிராய் உன்னை வளர்த்து
பத்தியம் பல இருந்து புட்டு
பச்சிளம் குழந்தையே உச்சி முகர்ந்து
உன்னையே உயிராய் சுமந்து பத்திரமாய் உன்னை வளர்த்தாள் தாலேலோ

மனதெல்லாம் உனது பாசம்;
மகளே மகத்தான தாய் பாசம்;
மக்காத தாய் மகவு பாசம்;
சத்தான இந்த பாசம்;
சந்தனமாய் அது மணக்கும் தாலேலோ;

மகளே உன் வாசம்,
அவள் மடியெல்லாம் வீசும்;
மகளே உன் சுவாசம் அவள் உயிராய் அது சுற்றிவரும் தாலேலோ

நீரோடைபோலே நீ ஓட, நிதானம் தவறி நீ விழும் முன்னே
நெய்யாய் உருகி நேசத்தோடு உன்னை அணைப்பாள் தாலேலோ;

உற்றார் ஊர் கண்ணு படாமல் இருக்க
உயிரோவியமே உனக்கு கன்னத்தில் கருத்த பொட்டு வைத்தே, கண் இமையாய் காத்து,
கனவுகள் ஆயிரம் கண்டுவிடுவாள் தாலேலோ

அள்ளி அள்ளி உன்னை எடுத்த அன்னை
சொல்லி சொல்லி உன்னை வளர்தாள்,
தன் சோகத்தை மறைத்தே தாலேலோ;

சொந்த பந்தம் நீ என்றே;
சொத்தும் நீ என்றே;
சுற்றங்களை மறந்து விட்டு;
சுற்றியே வந்துவிட்டாள் தாலேலோ;
சுற்றியே வந்துவிட்டாள் தாலேலோ;

வண்ண மரிக்கொழுந்தே; வானத்து நட்சத்திரமே;
வாடா மலரே; வாசனை திரவியமே;
வசந்த தென்றலே;
பேசும் பிறையே: பொற் சித்திரமே;
மாசிலா ஒளியே; மரகத மணியே;
வழிந்தோடும் பாசமே;
பாடும் குயிலே; பாற்குடமே பரவசமே;
வாழ்வின் சுவையே;
ஒயிலாய் விண்ணில் உலாவி வரும்
புது நிலவே;
ஒளிவீசும் மாணிக்கமே;
ஓசையோடு ஓடும் புதுப்புனலே;
ஆசையோடு திரியும் கார் மேகமே;
கண்மணியே;
அன்பே அமுதே; நீ உறங்குகு ;
அன்னை மடியில் அழகாய் நீ உறங்கு;
கண்ணே மணியே;
கற்பக விருட்சமே நீ உறங்கு;
கண் இமையாய் உன் அன்னை இருக்க
கவலை மறந்து நீ உறங்கு;
பண்பே பணிவே நீ உறங்கு;
பசியை போக்க அன்னை வந்து விட்டால் நீ உறங்கு;
பொன்னே மணியே பூச்சென்டே;
பொய்க்காத பொக்கிசமே நீ உறங்கு;
முழு நிலவே முல்லைப் பூ சரமே;
முத்துச்சாரலே;
மொய்க்கும் மோகனமே;
மௌமாய் நீ உறங்கு;

ஆறாவமுதே, அழகு பெட்டகமே;
அன்னையின் அன்பு முத்துக்கள்,
அன்பே நீ தந்தால் அது ஆயிரம் ஆயிரம் முத்தக்கள்;
ஆன்னை இவள் இருக்க அகிலமே உன் கையில்
அன்பே தாயின் மடியில் தைரியமாய் கண்ணுறங்கு தாலேலோ

அன்பன் அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (2-Sep-22, 3:50 pm)
Tanglish : thaayin thaalaattu
பார்வை : 207

மேலே