524 செலவிலா வரவாம் சிறப்புறப் பேணல் – பன்னெறி 4
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
எதிர்சென்று முகமன் கூறி
..யிருக்கையு நல்கி யுண்டே
அதிசய மெனவி னாவி
..யன்பொடு முகம லர்ந்து
துதிபுரிந் துபச ரிக்குந்
..தொழிலினாற் செலவொன் றில்லை
யதிர்கட லுலகு ளோர்தம்
..அன்பெலாம் வரவா மாதோ. 4
– பன்னெறி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
ஒருவரைக் கண்டதும் இருக்கை எழுந்து, எதிர்சென்று நன்றாக வரவேற்று, புகழ்மொழிந்து, இருக்க மணை, தவிசு முதலியன நல்கி, புதுமைநலம் முதலிய வினவி, அகத்தன்பும் முகமலர்ச்சியும், பொருந்த வாழ்த்திப் பேணும் பெருஞ்செயலால் ஒருகாசும் செலவாவதில்லை. அதன்மேலும் ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட உலகில் வாழ்வோர் அன்பு முழுவதும் நிலைத்த வரவாகும்.
முகமன் - புகழ். அதிசயம் -புதுமை. துதி - வாழ்த்து.