அன்றும் இன்றும் என்றும் தேவை ஆசிரியர்கள் சேவை

பிறக்கும்போதே ஒரு குழந்தை இரண்டு ஆசிரியர்களுடன் தான் பிறக்கிறது. அன்பு கல்வியை பழக்க ஓர் தெய்வ அன்னை, அறிவு கல்வியை துவங்க ஓர் அருமை தந்தை. மழலை மாறும் முன்பே, இக்காலத்தில் குழந்தைகள் விளையாட்டு பள்ளிக்கு செல்கிறது. அப்போதிலிருந்து சிறுவர்களுக்கு பள்ளியில் கற்று தரும் ஆசிரியர்கள் ஒவ்வொருவராக அறிமுகமாகிறார்கள். ஒருவர் வகுப்பாசிரியர், ஒருவர் இனிய தமிழ் கற்பிக்க, இன்னொருவர் கணிதத்திற்கு மற்றொருவர் விஞ்ஞானம் கற்றுத்தர, இது போல கீழ்நிலை பள்ளியில் தொடங்கி பல்கலை கழக படிப்பு வரையில் ஒவ்வொரு மாணவருக்கும் பல ஆசிரியர்கள் அமைகின்றனர்.

முன்னொரு காலத்தில், நன்கு கற்றறிந்த குரு என்று குறைந்த அளவில் சிலர் இருந்தனர். குருகுலம் முறையில் சிறுவர்கள், குருவின் இருப்பிடத்திற்கு சென்று அங்கேயே தங்கி பாடங்கள் கற்றனர். அங்கே
வசிக்கையில் , மாணவர்கள் குருவுக்கு வேண்டிய சேவைகளையும் செய்து பின்னர் அவர்களின் பெற்றோர்கள் அந்த குருவுக்கு அவர்களால் இயன்ற குருதட்சிணையை கொடுத்தனர். இத்தகைய குருகுல கல்வி மறைந்து, தற்கால கல்விமுறை கொஞ்சநஞ்சம் அல்ல முழுமையாக மாறிவிட்டது.

அன்று, ஒரு குரு நாற்பது சீடர்களுக்கு கல்வி மற்றும் அறநெறிகள் கற்பித்தார். இன்று நாற்பது மாணவர்களுக்கு பத்து ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். குருகுல காலத்தில் ஒரு குரு அவரது மாணவர்களை அடித்து வதைத்து கல்வியை புகட்டினாரா என்பது தெரியவில்லை. நமது கால கட்டத்திலேயே, சுமார் இருபது ஆண்டுகள் முன்வரை கூட , சரியாக படிக்காத மாணவர்களை, ஆசிரியர்கள் அடித்தும், சுமத்துதல் போன்ற சிறிய தண்டனை கொடுத்தும் கல்வி கற்பித்த காலம் தற்போது மறைந்தே விட்டது எனலாம். அத்திப்பூத்தாற்போல் ஆங்காங்கே சில ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்துவதை தான் இன்று நாம் கேள்விப்படுகிறோம்.

இக்கால ஆசிரியர்கள் மாணவர்களை நடத்தும் விதமே மாறிவிட்டது. மாணவர்களை கடிந்துகொள்வது, திட்டுவது, கையாலும் கழியாலும் அடிப்பது இவற்றையெல்லாம் இக்கால ஆசிரியர் ஒருவர் செய்ய தயங்குகிறார் என்பதை விட, பயப்படுகிறார் என்பதே சரியாகி இருக்கும். பெற்றோர்கள்-ஆசிரியர்கள் கூட்டம் ஒவ்வொரு பள்ளியிலும் இப்போது செயல்படுகிறது. தனது வகுப்பின் படிக்கும் மாணவ மாணவியை பற்றி ஒரு ஆசிரியர் அந்த மாணவரின் பெற்றோரிடத்தில் தெரிவிக்கின்றனர். இப்போதுள்ள சட்டதிட்டங்கள் மனிதாபிமானமற்ற செயல்களை கண்டிப்பதாகவும் தண்டிப்பதாகவும் இருப்பதால், ஆசிரியர்கள் மிகவும் கவனமான அணுகுமுறையுடன் மாணவர்களுடன் பழகுகிறார்கள்.

தற்போது கல்வி கற்பிக்கும் முறையில் மிகவும் பெரிய மாற்றங்கள் வரத்தொடங்கிவிட்டன. அபரிமித விஞ்ஞான வளர்ச்சியால், கணினி சார்ந்த கல்வி கற்பிக்கும் முறைகள் இந்நாளில் மிகவும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. இந்த காரணத்தினால்தான், கரோனா தொற்றுநோய் நாடுமுழுவதும் பரவி,பள்ளிகள் இழுத்து மூடப்பட்டும், பல பள்ளிகளில், குறிப்பாக மேல்நிலை பள்ளிகளில், கணினி மூலம், பல மாணவர்கள் அவரவர்கள் வீட்டிலிருந்தே வீடியோ மூலம் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை கண்டும் கேட்டும் பாடங்களை படித்தனர். கரோனா தொற்றுநோய் காலத்தில் ஆசிரியர்களின் திறமைகள் வெளியில் கொண்டு வரப்பட்டது. ஒருவருக்கு சங்கீதம், யோகா, சித்திரம் வரைதல், தற்காப்பு யுத்திகள், மற்றும் உற்சாகத்துடன் உந்துதலுடன் வாழ்க்கை லட்சியங்களை எதிர்கொள்ள கற்பிக்கும் பயிற்சியாளர்கள் இவர்களை போன்ற அனைவருமே ஆசிரியர்கள் தான்.

பள்ளியில் , கல்லூரியில் கற்றுத்தருபவர்கள் மட்டுமே ஆசிரியர்கள் இல்லை. ஒருவருக்கு அவரது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அறிவுரை கூறுபவர்கள், ஒருவர் அலுவலகத்தில் எப்படி வேலைகளை செய்ய வேண்டும் என்று புரியவைப்பவர்கள், வாழ்க்கையில் துன்பம் வருகையில் அத்தகைய துன்பத்தினை எதிர்கொள்ளவும், வெல்லவும் வெற்றிகரமான ஆலோசனை தருபர்கள், இவர்கள் அனைவருமே கவுரவ ஆசிரியர்கள்தான். கல்வி ஆசிரியர்கள் ஒரு மாணவனை நன்கு படிக்கும் மாணவனாகவும், அவன் திறமையை வெளிப்படுத்தும் மாணவனாகவும் உருவாக்கும் பணியில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதே நேரத்தில் மேற்குறிப்பிடப்பட்ட, கவுரவ ஆசிரியர்கள் பலரும் கல்வி ஆசிரியர்களை போல மெச்சப்படவேண்டிய , பாராட்டப்படவேண்டிய, மதிக்கப்படவேண்டிய நபர்கள் தான்.

முந்நாளைய ஜனாதிபதி உலகீய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த இன்று பாரதத்தில் கொண்டாடப்படுகிறது. காரணம், இவர் மிகவும் சிறப்பான முறையில் கல்விக்கு தொண்டு புரிந்தார். இவருக்கு நமது மரியாதையை கலந்த அஞ்சலியை தெரிவித்துக்கொண்டு, பாரதம் மட்டும் அல்லாமல், உலகமெங்கும் உள்ள ஒவ்வொரு ஆசிரியருக்கும் நாம் நன்றி சொல்லி மனமார்ந்த நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

வாழ்க தொண்டு புரியும் ஆசிரியர்கள்
வளர்க அவர்களது கல்வி சேவைகள்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (5-Sep-22, 9:18 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 259

சிறந்த கட்டுரைகள்

மேலே