உறுதியின் ஊற்று
உன் பாதை நீளமானது
இருளும் இடர்களும் ஏராளம் அதில்
உன் கையில் திறச்சுடர் உள்ளது.
உன் பயணம் பெரியது
துரோகமும்,ஏமாற்றமும்
எண்ணிலடங்கா அதில்.
உன் கையில் நம்பிக்கைக் கேடயம் உள்ளது.
உன் உழைப்பு அதிகமானது
உறங்கா இரவும்,உண்ணாப் பகலும்,
ஓராயிரம் தியாகமும் அதில்
உன்னிடம் உறுதிக்கயிறு உள்ளது.
உன் முயற்சிகள் ஏராளம்
கனத்த அடிகளும்,காயங்களும்,
வீழ்ச்சியும் கணக்கற்று அதில்.
உன்னிடம் உடையா மனம் உள்ளது.
உன் இலக்கு உயர்வானது
ஓய்தல்,தேய்தல்,உடைதல்,
சரிதல்,விழுதல் எல்லாவற்றின் மீதும்
நீ பயணம் செய்கிறாய்.
உன் கையில் வெற்றியின் வரைபடம் உள்ளது.
நீ தடைகளை மதிக்கிறாய்
உன் தடைகளிடம் பாடம் படிக்கிறாய்.
ஏளனக் கணைகள் தொடுப்பவர்
கண்களை நீ எதிர்த்துப் பார்க்கிறாய்.
உன் விழிப் பதிலைப் பெற்றவர்கள்
மொழிப் பதிலை எதிர்பார்ப்பதில்லை.
உன் விழியின் பேராற்றல் உணர்ந்தவர்கள்
உன் வழியில் வருவதே இல்லை.
தூரத்தில் இருந்து பார்ப்போருக்கு
நீ சிறு விண்மீன்.
உன் அருகில் இருந்து பார்ப்போருக்கு
நீ அழகுப் பேரொளி.
தோல்வியைத் தோழியாக்கி அதையே
துணையாக்கி வெற்றியைப் பறிப்பவள் நீ.
உன் உயரத்தின் படிக்கட்டு எல்லாமும்
உன்னாலே கட்டப்பட்டது.
உன் கால்களே உன்னை உயர்த்தியது.
உன் முயற்சியே உன்னை உருவாக்கியது.
தொடரும் பயணத்திலும்
தொடப் போகும் புதுப் பாதையிலும்
உன் வெற்றிக்கு உற்ற துணையாய் உன்னுறுதியே.
உன் ஓட்டப் போட்டியில்
உற்சாகமூட்டுகிறேன் கைத்தட்டி ;
உனக்கு ரசிகனாய் இருப்பதாலே
எனக்குந் தானே மனங்கெட்டி.