இவளுக்கு பதில் என்ன

இவளுக்கு பதில் என்ன?
அரசாணி கிழவி சாக கிடக்கிறாள்.ஒரு காலத்தில் அழகு ராணியாய் வலம் வந்தவள், அதை விட இந்த ஊரே அவளுக்கு கடமைபட்டிருந்தது. அவளது இளமை காலத்தில் அவளது கணவனாக இருந்தவன் ஆறுச்சாமி மிகப்பெரிய கொள்ளைக்காரன். அவனை கண்டால் அந்த ஊர் மட்டுமல்ல, காவல்துறையும் பதட்டப்பட்டுவிடுவார்கள். ஆங்கிலேய அதிகாரிகள் காவல்துறையை போட்டு வாட்டி எடுப்பார்கள். உடனே ஆறுச்சாமியை கைது செய்து ஒப்படைத்தாக வேண்டும் என்று.
காவலதிகாரியும் என்னன்னமோ முயற்சிகள் செய்து விட்டார், அவன் பிடிபடும் பாட்டைத்தான் காணோம். எங்கு பட்டாளத்துடன் போனாலும் கம்பி நீட்டி விடுவான். இறுதியாக அவர்கள் யோசனை அவனது பொண்டாட்டி அரசாணியிடம் போய் விழுந்தது.
அரசாணியை அந்த காலத்து இளைஞர்கள் அந்த ஊரில் கனவுக்கன்னியாகவே வரித்து வைத்திருந்தார்கள். அவள் அந்த ஊரில் நடந்து வந்தாள் என்றால் இளம் வாலிப வட்டங்களின் மனம் படாத பாடுபடும். அவளது கவனத்தை தன் பக்கம் திருப்ப இளைஞர்கள் போட்டி போடுவதுண்டு…ஆனால்..
எல்லோருக்கும் மனதுக்குள் ஒரு பயம் உண்டு. அவள் ஆறுச்சாமியின் முறைப்பெண்.ஆறுச்சாமி மிகப்பெரிய கொள்ளைக்காரன் மட்டுமல்ல, அவளது உடலோ மனதையோ எதையாவது ஒருவன் தீண்டிவிட்டான் என்றால் அதற்கு பிறகு அவன் உயிர் அவனுக்கு நிச்சயமில்லை. இப்படி இருக்கையில் எந்த இளைஞன் அரசாணியின் பக்கம் வருவான். ஏக்கப்பெருமூச்சு விடுவதுடன் சரி..
அரசாணியின் மனதுக்குள் ஆறுச்சாமியை தவிர எவனும் இல்லை. அவர்கள் பெற்றோர்கள் அவளை பயமுறுத்தி பார்த்தார்கள். அவனை கட்டிக்கொண்டால் நாளொரு தினம் போலீஸ் தொல்லை, பிறகு அவனை எப்பொழுது வேண்டுமானாலும் சுட்டு கொன்று விடுவார்கள். இப்படி எத்தனையோ பயமுறுத்தி பார்த்தார்கள். அவள் ஒற்றை காலில் நின்றாள். அவனைத்தான் கட்டுவேன் என்று நின்றாள்.
ஒரு நாள் காதோடு காதாய் அவர்களது திருமணம் ஒரு கோயிலில் அதுவும் அவன் பதுங்கியிருந்த காட்டுக்குள்ளே இருந்த ஒரு கோயிலிலேயே திருமணம் நடந்தது.
அவர்கள் அந்த காட்டுக்குள் தமபதிகளாய் ஐந்து வருடங்கள் வாழ்ந்திருந்தார்கள். அதற்குள் அவளுக்கு நண்டும் சிண்டுமாய் இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டன. இப்பொழுது ஆறுச்சாமியை பற்றி அதிகம் கவலைப்பட ஆரம்பித்து விட்டாள் அரசாணி. போதும் பேசாமல் போலீசில் சரண்டர் ஆகி விடு, நமக்கு குழந்தைகள் ஆகி விட்டார்கள் என்று வற்புறுத்த ஆரம்பித்து விட்டாள். அவன கேட்பதாக தெரியவில்லை.
ஒரு கட்டத்தில் அவனை விட்டு விட்டு ஊருக்குள் குடி வந்து விட்டாள். ஆனால் அவனை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டுதான் இருந்தாள். என்றாலும் குழந்தைகளின் வாழ்க்கைக்காக ஊருக்குள் வந்தாக வேண்டிய சூழ்நிலை.
ஜெமிசன் ஆங்கில காவல் துறை அதிகாரியாய் அந்த மாவட்டத்தில் பதவியேற்ற பின் அவர் சொன்ன முதல் சூளுரையே இந்த ஆறுச்சாமியை உயிரோடோ இல்லை பிணமாகவோ பிடிப்பதுதான். அதன் படி அந்த ஊரின் காவல்துறை அதிகாரி ரங்கபாஷ்யத்தை வரவழைத்து ஆறுச்சாமியின் கதைகள் முழுவதையும் கேட்டறிந்தார். அவருக்கு இதில் பிடித்த முக்கியமான அம்சம் அரசாணி அவனுடன் வாழ பிடிக்காமல் ஊருக்குள் வந்து விட்டதுதான். இது போதுமே. அரசாணியிடம் நெருங்க..
ஆறுச்சாமிக்கு ஒரு தொடுப்பு அந்த ஊருக்கு அடுத்த ஊரில் உண்டு என்று ஒரு வதந்தி. அவன் மாதம் ஒரு முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ அங்கு வந்து செல்வான் என்று செய்தி வந்தது. அதை காவல் துறை அரசாணியிடம்தான் கறந்தனர். அதுவும் அவனை கைது மட்டுமே செய்வதாகவும், எந்த காரணம் கொண்டும் சுடமாட்டோம் என்று உறுதி கூறி இந்த தகவலை வாங்கினர். இந்த தொடுப்பு அரசாணியை கல்யாணம் செய்யுமுன்னரே இருந்திருக்கிறது. அது இவளுக்கு முதல் குழந்தை பிறந்தபோதுதான் தெரிந்தது. சண்டையிட்டாள். அப்பொழுதுதான் அவன் சொன்னான் உன்னை கல்யாணம் செய்யும் முன்னரே எனக்கு பழக்கம் என்று. அப்பொழுது அவன் மேல் இருந்த காதலால் அதை பெரிதாக எண்ணவில்லை.
இப்பொழுது அவனை விட்டு வந்த பின் அவனது பழக்கம் அங்கு அதிகமாகி யிருப்பதாக இவள் காதுக்கு செய்தி வந்தது. அவள் மேல் இருந்த கோபத்தில் முக்கியமான இந்த தகவலை போலீசிடம் வெளியிட்டாள்.
ஆறுச்சாமியை அந்த பெண் வீட்டில் வைத்து காவல்துறை கைது செய்து விட்டது. இந்த செய்தி அந்த ஊர் முழுக்க மட்டுல்ல அந்த சமஸ்தானம் முழுக்க பரவி விட்டது. காவல் துறை நாளை இந்த ஊரின் நடுவில் வைத்து விசாரிக்க இருப்பதாக தகவல் சொல்லிவிட்டு போனான் ஒலிபரப்பாளன்.
எங்கு பார்த்தாலும் மக்கள், இந்த ஊர் மட்டுமல்ல பக்கத்து பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் அந்த மைதானத்தை சுற்றி வந்து நின்று விட்டது. அரசாணியும் மனம் படக்க பயத்துடன் தனது கணவனுக்கு ஏதேனும் ஆகி விடக்கூடாதே என்று நடுக்கத்துடன் சென்றாள்.
இரு கைகளையும் பின்னால் கட்டி வைத்து காலில் சங்கிலியை போட்டு அவனை இழுத்து வந்த போது அங்கிருந்த அனைவருக்குமே நடுக்கமாய் இருந்தது. ஆனால் ஆறுச்சாமி எந்த கவலையும் படாமல் நெஞ்சை நிமிர்த்தி நடந்து வந்தான். அவன் மனதுக்குள் அப்படி ஒரு தைரியம். அது மட்டுமல்ல இவன் கைதானவுடன் மனதுக்குள் நினைத்தது இதுதான், யாரோ நம்பிக்கையான ஆள் என்னை பற்றி துப்பு கொடுத்து விட்டான் என்று. அப்பொழுது கூட அவனுக்கு அரசாணி ஞாபகம் வரவில்லை. இல்லை அவளை பற்றிய நம்பிக்கையாக கூட இருந்திருக்கலாம்.
விசாரணையை ஆரம்பிக்க காவல் அதிகாரி ஒருவர் நடுவில் அமர்ந்து கொண்டார். அவரையும், மற்றும் பொது மக்கள் குற்றாவாளியை நெருங்காமல் இருக்க சுற்றிலும் காவலாளர்கள் நின்று கொண்டனர். ஆறுச்சாமியை பற்றி குற்றப்பத்திரிக்கை பொது மக்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. கடைசியாக இதற்கு என்ன சொல்கிறாய்? என்று காவல் அதிகாரி அவனிடம் கேட்டார்.
அவன் அப்பொழுதும் கம்பீரமாய் நின்று கொண்டு அனைத்தையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஒரு ஏழை மனிதனும் என்னால் பாதிக்கப்பட்டதில்லை என்பதை மட்டும் இந்த கூட்டத்தில் சொல்லிக் கொள்கிறேன். அவ்வளவுதான் என்றான். அதிகாரி அவனை சுட்டு கொல்லும்படி உத்தரவிட்டார்.
அவனை நடு மைதானத்தில் நிற்க வைத்த போலீஸ் சற்று தள்ளி ஒரு போலீஸ்காரனை நிற்க வைத்து துப்பாக்கியை அவனது நெஞ்சுக்கு நேராக வைத்து அதிகாரியின் ஆணைக்கு காத்திருக்க..
ஒன்று இரண்டு மூன்றூ என்று சொல்லி கைசை காட்ட துப்பாக்கியில் இருந்து கிளம்பிய குண்டு அவனது நெஞ்சை தாக்குமுன் ஒரு பெண் எங்கிருந்தோ ஓடி வந்தவள் அந்த குண்டை நெஞ்சில் வாங்கி அப்படியே சரிந்து விழுந்தாள்.
அவளை நோக்கி கதறலுடன் முன்னால் காலை வைக்க முயற்சி செய்த ஆறுச்சாமியை அடுத்த குண்டு மார்பை துளைக்க அப்படியே சரிந்து விழுந்தான்.
இத்தனையும் பார்த்துக்கொண்டிருந்த பொது மக்களில் ஒரு சிலர் அவனுக்கு இது வேண்டும் என்று நினைக்க பலர் அவனுக்காக பரிதபப்பட்டனர். அனைவரின் கவனமும் அவனுக்காக இறந்தவள் யார் என்று பார்க்க இவனை எந்த பெண் வீட்டில் வைத்து கைது செய்தார்களோ அந்த பெண்தான் இவனுக்காக தன்னுடைய உயிரை கொடுத்திருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அனைவரின் வாயில் இருந்து கிளம்பிய வார்த்தை “ஆஹா”இவள் சாதாரண பெண்ணில்லை பாவம் “சேற்றில் முளைத்து விட்ட செந்தாமரை”
தன் கண் முன்னால் தன் கணவனுக்காக அந்த பெண் இறந்ததும், அவளை நோக்கி கதறலுடன் முன் வந்த ஆறுச்சாமியும் இறந்து விழுந்ததையும் கண்டு பிரமையுடன் பார்த்துக் கொண்டிருந்த அரசாணிக்கு தலை சுற்றலும் மயக்கமும் வர அப்படியே சரிந்து விழுந்தாள்.
அவள் சுற்றத்தார் அவளை துக்கி வந்து வீட்டில் படுக்க வைத்தனர். அதன் பின் போலீஸ் அதிகாரிகள் அவளுக்கு எத்தனையோ பாராட்டுக்களை வழங்கினார்கள். ஊரில் வைத்து அவளுக்கு பண முடிப்பும் வழங்கினார்கள். ஆனால் அவளது மனம் அவளை ஒரு குற்றவாளியாகவே குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டது. தான் செய்தது, அந்த பெண்ணின் மீது கொண்ட பொறாமையினால்தான், ஆனால் அந்த பெண் செய்தது? அப்படியானால் நான் ?
இந்த கேள்வி இன்று வரை அவளது நூறாவது வயதை எட்டி இதோ இன்னும் சாகமாட்டாமல் இழுத்து கொண்டிருக்கிறதே இவள் மனதுக்கு யார் பதில் சொல்வது?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (14-Sep-22, 9:14 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 131

மேலே