பால்நிலா

உன் விசித்திர
பார்வையால்
உடைந்து கொண்டிருந்தது
அந்த நிலவென்றாய்

அலட்சியம் செய்யாமல்
அன்று விட்டுவிட்டேன்

மற்றொரிரவில்
நீ பேச மறுத்து
சொற்கள்
விழுங்க முழித்தாய்

காரணம் புரியாமல்
குழம்பி கிடக்க

ஆடையிழந்த நிலவின்
தினமென்றாய் இன்று
இருள் மட்டும் ஜொலிக்கும்
நீள்வான்
எங்கும் மொய்க்கும்
விண்மீன்கள்

உன் பார்வையின்
விசித்திரம்
புரியாமல் நான்
மேலும் தவிக்கையில்
ஒருநாள்

கையளவு நீரை
குவளையில் பிடித்து
நிலவின் கரைந்த
உடலென்றாய்

என் அற்ப
விழிகளுக்கு
அதுவும் புலப்படாமல்
போக

என்றோ ஓரிரவு
மூச்சிறைக்க
என்னை மாடியேறச் செய்து
ஒய்யாரமாக உன்
விரல்களை மேல் நீட்டி
புன்னகைத்தாய்

கோபம் ததும்ப நான் பார்க்க

என் விரல்களை
எடுத்து உன் வயிற்றில் பதித்து
ஒரு பவுர்ணமியை
நான் சுமக்க
தொடங்கி இருப்பதாக
கூறினாய்

அன்றோ இரவான என் விழிகளில்
மழைத்துளியாய் சிறிது
ஈரம்
நாம் பால்பொங்க சிரித்தோம்...

எழுதியவர் : S. Ra (16-Sep-22, 9:02 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : paalnila
பார்வை : 111

மேலே