கற்றதொன்று இன்றி விடினும் கருமத்தை அற்ற முடிப்பான் அறிவுடையான் - பழமொழி நானூறு 186

நேரிசை வெண்பா

கற்றதொன்(று) இன்றி விடினும் கருமத்தை
அற்ற முடிப்பான் அறிவுடையான் - உற்றியம்பும்
நீத்தநீர்ச் சேர்ப்ப! இளையோனே யாயினும்
மூத்தானே யாடு மகன். 186

- பழமொழி நானூறு

பொருளுரை:

பொருந்தி ஆரவாரிக்கும் பிரளய கால வெள்ளம்போல் பரக்கும் நீரையுடைய கடல்நாடனே! படித்தறிந்தது ஒரு சிறிதும் இல்லையாயினும் தொடங்கிய செயலைச் சோம்பலின்றி முடிப்பவன் அறிவுடையான் எனப்படுவான்; அங்ஙனம் செயலை ஆற்றுவோன் ஆண்டில் இளையவனேயானாலும் அறிவில் முதிர்ந்தவன் எனப்படுவான்.

கருத்து:

நூலறிவு இல்லானே ஆயினும் கருமச் சூழ்ச்சியறிதலின், எடுத்த செயலை முடிப்போன் அறிவுடையான் எனப்படுவான்.

விளக்கம்:

நூலறிவு இன்றே யெனினும், செயலை முடிக்கும் கருமச் சூழ்ச்சி அவனிடம் இருத்தலின், அறிவுடையான் என்றே எண்ணத் தகும்.

'இளையோனே யாயினும் மூத்தானே ஆடுமகன்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-22, 7:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே