உங்களுக்காக ஒரு கடிதம் 31
இனிய நாள் வாழ்த்துக்கள்.
இன்று என்னை மிகவும் பாதித்த நிகழ்வுகளை பதிவிட...உங்களோட பகிர்ந்திட விழைகிறேன். இது யாரையும் புண்படுத்தும் நோக்கம் கிஞ்சித்தும் இல்லாமல் என் பாதிப்பை...என் கவலையை சொல்கிறேன்.சாரி எழுதுகிறேன். அதன் ஆணி வேரை கண்டறிய முயலுவோம். முடிந்தவரை தீர்வை காண முயற்சிப்போம்.
இன்றைய கல்வியின் நிலைமை...கல்வியாளரின் நடவடிக்கைகள் பற்றித்தான் எழுதப்போகிறேன்.
மாதா..பிதா...குரு...தெய்வம் என்று நம் முன்னோர்கள் வரைபடுத்தி வைத்திருக்கிறார்கள். தினமும் நாம் வணங்கும் ... கொண்டாடும் தெய்வம் கூட வரிசையின் கடைசியில்தான் நிலை படுத்தப்பட்டிருக்கிறது.வரம் தரும் தெய்வம் கடைசியில் தள்ளப் பட்டிருக்கிறது. பெற்ற தாய்தந்தையருக்கு அடுத்த நிலை குருவிற்கு அதாவது ஆசிரியருக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இன்றைய நிலை...? உங்களுக்கே நன்றாகத் தெரியும். இதைப்பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக விவாதித்து விட்டார்கள். எழுதியும் விட்டார்கள். நான் என்ன எழுதுவது என்று எனக்கே புரியவில்லை. என் மனதில் பட்டதை... நான் பார்த்ததை அப்படியே எழுதப்போகிறேன்.
" அன்னச்சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.." பாரதியின் பாட்டு... கனவு... இங்கோ கல்வியே வியாபாரமாகிப்போய் நெடுநாட்கள் ஆகிவிட்டது. அந்த வியாபாரச் சந்தையில் ஏழையின் கல்விக்கனவு கசங்கிய காகிதமாய்
தெருவில் வீசப்பட்ட குப்பையாய் போய் விட்டதே. கனவும் பொய்த்து போய்விட்டதே என்ன செய்ய? இது யார் குற்றம்? சமுதாய குற்றமா? சர்க்காரின் குற்றமா? இல்லை தனி மனித குற்றமா? ஒன்றுக்கு ஒன்று வெளியில் தெரியாத நுட்பமான தொடர்புடையதாக இருக்கிறது. என்ன செய்ய? சிலபேர் இதை லாபமாக்கி.... வியாபார சாம்ராஜ்யத்தையே உருவாக்கி...இரும்பு கோட்டையாக்கி ஜெய கொடி பறக்கவிட்டு கோடியில் புரளுகிறார்கள். இது பாவம் இல்லையா? அந்த சரஸ்வதிக்கே வெளிச்சம்.
ஏழை...இதற்கான சரியான வரைமுறை இல்லை. சாதி..மதம்..மொழி..என்று பல்வேறு தடைகள் வேறு. யார் ஏழை? பில்லியன் டாலர் கேள்வி? இது சாதி...மதம்...மொழிக்கு அப்பாற்பட்டது. கல்வியும் கடவுள் போன்றததுதான். கடவுளுக்கு முன் எல்லோரும் சமமே. பாகுபாடு எதுவும் கிடையாது. ஆனால் இங்கு உண்மையில் நடப்பது என்ன? ஏழை முன்னேறுவதற்கு வாய்ப்புகள் குறைந்து போய்விட்டது. குறைக்கப் பட்டுவிட்டது. ஏழை ஏழையாகவே இருக்கவேண்டும். கை ஏந்துபவர்கள் கை ஏந்திக்கொண்டே இருக்க வேண்டும். கும்பிடு போடுபவன் கும்பிடு போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இது எழுதப் படாத சட்டமாக மதிக்கப்பட்டு பின்பற்றப்பட்டும் வருவதுதான் கொடுமை.
நடை முறையில் கல்வி சிஸ்டத்திலேயே குறைபாடா? கொஞ்சமும் தெரியவில்லை.... புரியவும் இல்லை ... இதன் உள்ளே போய் ஆராய்தல் தேவையா? இதைப்பற்றி விவாதிக்க...யோசிக்க...உங்களிடமே விட்டு விடுகிறேன்.
தொடருவேன்.