கவிதாநதி தீரத்திலே கம்பன் அவையடக்கம்

அறையும் ஆடரங் கும்படப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ
இறையும் ஞானமி லாதஎன் புன்கவி
முறையில் நூலுணர்ந் தாரும் முனிவரோ

----மாபெரும் காவியமான ராமாயணத்தை
எழுதிய கம்பன் அறை ஆடரங்கு என்று
சின்னஞ் சிறுவர்கள் கரிக்குச்சி கொண்டு
கிறுக்கியது போன்றதாகும் என் செயல்
சிறிதேனும் அறிவிலா என் "புன்கவியை "
முறையாக நூல் பயின்ற சான்றோர்கள்
வெகுண்டுரைக்க மாட்டார்கள் என்று
சொல்கிறான்

யாபெழில்கள் :
இது கலிவிருத்தம் எனும் கலிப்பாவின் பாவினம்
நாலு சீர் நாலடி ஒரே முதற்சீர் இதன் இலக்கண அடிப்படை
ஒரே எதுகை இன்றி பாவினம் அமையா
அறை தறை இறை முறை இங்கே எதுகைகள்
பாவினத்திற்கு வெண்பா போல் தளை விதிகள் இல்லை

இதற்கப்பாலும் இந்தக் கலிவிருத்தத்தில் மோனையும்
எழில் சேர்க்கிறது

முதலடியில் 1 2 ஆம் சீர்களில் அ ஆ மோனை
2 ஆம் அடியில் 1 2 3 4 சீர்களிலும் மோனை த கீ த கா
3 ஆம் அடியில் மோனை எதுவும் இல்லை
4 ஆம் அடியில் 1 2 4 ஆம் சீரில் மு நூ மு மோனை

பாவினத்திற்கு எதுகை இன்றியமையாதது
மோனையும் கைகோர்த்துக் கொண்டால்
இலக்கியம் இன்னும் எழில் பெறும்
இந்த கம்பனின் கலிவிருத்தத்தில் ரசித்தோம்
நான் ரசித்த கம்பனின் கவிதைகளை இப்பகுதியில்
மேலும் எழுதுவேன்
இலக்கியத்தைப் பற்றி எழுதும் போது இலக்கண அடையாளங்களை
சொல்லத் தேவை இல்லை யாப்பார்வலர்களுக்கு பயன் தரக்கூடும்
என்று படித்த தகல்வல்களை சொல்கிறேன்

எழுதியவர் : கம்பன் (25-Oct-22, 4:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே