இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போம் மார்க்கம் தாங்கண் டிருந்தும் – நாலடியார் 323

நேரிசை வெண்பா
(’மை’ ‘னை’ மெல்லின எதுகை)

இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் - தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கா லென்? 323

- புல்லறிவாண்மை, நாலடியார்

பொருளுரை:

கண்ணிமைக்கும் அத்துணைச் சிறுபொழுதில் தமது இனிய உயிரானது பிரிந்துபோம் இயல்பை எவ்வகையாலுந் தாம் தெரிந்திருந்தும் உலகில் உயிரோடிருப்பதற்குள் தினையளவாயினும் நற்செயல்கள் செய்து பிறவியைப் பயனுடையதாக்கிக் கொள்ளாத வெட்கமில்லா அறியாமை மாந்தர் இறந்தாலென்ன, இறவாதுஇருந்தாலென்ன? இரண்டும் ஒன்றே.

கருத்து:

புல்லறிவுடையோர் தமது வாழ்க்கையைப் பயனுடையதாக்கி இன்புறல் அறியார்.

விளக்கம்:

தாம் இனிதாகக் கருதி வளர்க்கும் உயிர் என்றற்கு, இன்னுயிர் என்றார்.

மார்க்கமறிதல் - பிறருயிர் பிரியும் வழிகளைக் காண்டல்;

எனைத்தானும் என்றது, எல்லாப்படியாலும் என்றற்கு;

தாம் வறிதே உயிர் காத்து நிற்கும் பொருந்தாச் செயலில் உள்ள ஒடுக்கமின்மையின், ‘நாணில்' எனவும், அதனைத் தடியும் அறிவாற்றலில்லாமையின் ‘மடமாக்கள்' எனவுங் கூறினார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Nov-22, 3:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே