கண்டாரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன் தண்டித் தனிப்பகை கோள் – நாலடியார் 324
நேரிசை வெண்பா
உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,
பலர்மன்னுந் தூற்றும் பழியால், - பலருள்ளும்
கண்டாரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
தண்டித் தனிப்பகை கோள் 324
- புல்லறிவாண்மை, நாலடியார்
பொருளுரை:
இவ்வுலகில் உயிர்வாழ்ந்திருக்கும் நாட்கள் சில, அச் சிலநாட்களிலும் உயிர்க்குப் பாதுகாப்பு இல்லை, பலர்தூற்றும் பழி வேறு; ஆதலால், உலகிலுள்ள பலருள்ளும் எதிர்ப்பட்டவரோடு எல்லாம் மகிழ்ந்தொழுகாது விலகி ஒருவன் கடும்பகை கொள்ளுதல் ஏன்?
கருத்து:
பலரோடும் அளவளாவி மகிழாது விலகிப் பகை கொள்ளுதல் புல்லறிவாகும்.
விளக்கம்:
நகுதல். அளவளாவி: மகிழ்ந் தொழுகுதல்; தண்டுதல், நீங்குதல், தனிப்பகை, மிக்க பகையென்னும் பொருட்டு.