பிரம்மச்சாரி
நெரிசல் மிகுந்த பகுதிகள்
எனக்கு ஆகாதவையாகி வருகின்றன
இப்பொழுதெல்லாம்!
இடிபடாமல், எவரையும்
இடித்துவிடாமல்
செல்லும் கலையில்
இளங்கலையும் தேறாதவனாய்
இருந்துகொண்டிருக்கிறேன்.
யாரையேனும் திட்டுவதோ
அல்லது யாரிடமாவது திட்டுவாங்கி
முகஞ்சுளிக்காமல் நகர்வதோ
முன்பு போல் சுலபமாகயில்லை.
அட்டைகள் அடுக்கிய
மணிபர்ஸின் கற்பை
அவ்வப்போது தடவித் தடவியே
காப்பாற்ற வேண்டியிருக்கிறது!
இவையெல்லாவற்றையும் விட
உண்மைக் காரணம் ஒன்றிருக்கிறது;
அறைக்குள் ஒடுங்கியிருக்கும்
மனக் கடிவாளம்
நெரிசலான இடங்களில்
கண்களுக்கு அணிகலனாகிறது
குளிர்கண்ணாடியாக! -
யாருமறியாமல்
அலைப்பாயும் அவற்றில்
பதிவாகும் சுந்தரிகள்...
பிரம்மமும் இல்லா, ஆச்சார்யமும் இல்லா
ஐம்பதுகளைக் கடந்த பிரம்மச்சாரியிடம்
கனவில் மட்டுமே கொஞ்சுகிறார்கள் -
“உங்களுக்குக் கல்யாணமாயிடுச்சா?”