அறிதுயில் ஆர்க்கும் எழுப்பல் அரிது - பழமொழி நானூறு 222
இன்னிசை வெண்பா
தொடித்தோள் மடவார் துணைமுலை ஆகம்
மடுத்(து)அவர் மார்பில் மகிழ்நன் - மடுப்ப,
நெறிஅல்ல சொல்லல்நீ, பாண! - அறிதுயில்
ஆர்க்கும் எடுப்பல் அரிது. 222 - பழமொழி நானூறு
தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்தவர் மார்பில் மகிழ்நன் - மடுப்ப
நெறியல்ல சொல்லல்நீ பாண! - அறிதுயில்
ஆர்க்கும் எழுப்பல் அரிது. 222
- பழமொழி நானூறு
பொருளுரை:
தொடியணிந்த தோள்களையுடைய பரத்தையர் மார்பினைத் தன் மார்பில் சேர்த்து அப்பரத்தையர் மார்பில் தலைவன் சேர (நிகழ்த்திய தொன்றை) பாணனே! நீ இங்ஙனம் ஒழுகுதல் நெறியன்றென்று தலைவனிடத்துச் சொல்லுதலை ஒழிவாயாக;
பொய்த்துயிலினின்றும் ஒருவரை நீக்குதல் யாரானும் முடியாதாம்.
கருத்து;
பாணனுக்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறியது.
விளக்கம்:
தன் தோளிலுள்ள தொடி நெகிழ்ந்தமை தோன்றத் தொடித்தோள் என்றார்.
தொடி: மகளிர் தோளிற் கணியும் அணி - இது மகளிர் தோட்களைத் தொட்டுக்கொண்டு இறுக இருத்தலின், தொடி என்றாயது. பிறரும் 'தொடி நெகிழ்ந்தனவே' என்று நெகிழற் கருமை தோன்ற நின்றமையைக் குறித்தார்.
'நெறியல்ல சொல்லல் நீ' என்றது, பரிசு கருதி உழல்பவன் நீயாதலால், நீயும் உடன்பட்டிருந்தாய் என்பதாம்.
அறிதுயில்: ஈண்டு இஃது எல்லாவற்றானும் அறிந்து கொண்டு கதவடைத்துத் தூங்கும் பொய்த் தூக்கம்.
அதுவாயின் மனனுணர்வு ஒன்றே யறிய, ஏனைய புலன்களும் பொறிகளும் தூங்குவதாம்.
அறிதுயிலினின்றும் எழுப்புதல் அரிதாமாறுபோல, எம்மிடத்தும் வாயில் பெறுதலும் இயலாதாம்; செல்க என்பதாம்.
'அறிதுயில் ஆர்க்கும் எழுப்பல் அரிது' என்பது பழமொழி.