சகோதரன்

கனவு பல கண்டிருப்பான்
தம்பி என்பான், தங்கை என்பான்
தன் கனவை மறப்பான்.
அவர்தம் கனவை மெய்ப்பிக்க
தன்னை கரைப்பான்.
தனக்கென எதற்கு என்பான்
அதனையே கேட்கும் முன்னரே
செய்வான் உடன்பிறப்புக்காக.
தகப்பனின் பாரம் சுமப்பான்
தாயின் அன்பை விதைப்பான்.
தான் கண்ட கெட்ட கனவை
எந்நாளும் அவர்களின்
வழியில் விழ விடமாட்டான்.
உடன்பிறப்பின் பாதைதனை
பூக்களை கொண்டு அலங்கரிப்பான்.
அவன் மிதித்த கரடுகளை,
அதில் விழுந்த உதிரத்தை
அந்த பூக்களை கொண்டு
மூடி மறைப்பான்.
இளவரசன், இளவரசி கதைகளை அவர்களில் நிசம் காண்பான்.
குப்பையில் அவன் இருந்தாலும் கோபுரத்தில் நம்மை வைப்பான்.
கேட்டால் நான் பார்க்கும் வேலை
சொர்க்கத்தில் கூட கிடைக்காது என்பான்.
தன் பசி மறப்பான்.
உலகத்தின் ருசியை தனக்கு பின்னே
தான் பிறந்த வயிற்றில் வரும் உயிர்க்கு கொடுப்பான்.
தனக்கென வாழ்வு உள்ளதென மறப்பான்.
பாரு வாழ்வை என்றால் நகைப்பான்.
மின்னலை போல வாழ்க்கை வாழும் ஞானி அவன்.
தெளிவுறு…
உனக்கென தனி வாழ்வு காத்து இருக்கிறது.
அனுபவி……

எழுதியவர் : நிலவன் (23-Nov-22, 10:29 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : sagotharan
பார்வை : 190

மேலே