கடல்
உனது ஓசை அருகில் கேட்டு
இரைச்சலும் இசை ஆகிறதே
அள்ளி அள்ளி தள்ளுகிறாயே
நீரின் கனம் அறியாயோ?
என் பாதம் நனைக்க
குழந்தையாய் ஓடி வரும் வேகம் என்ன?
அருகில் வா
நெருங்கி விடாதே என்று தான்
அலை கொண்டு தள்ளுகிறாயோ?
அடங்க மறுக்கும் மனமாய்
உனை எண்ண
அமைதியாய் தூரத்தில்
சத்தமின்றி அடங்கி கிடக்கிறாய்.
குளிர்ச்சி சுமக்கும் உந்தன் காற்றை
வாழும் காலங்கள் வேண்டுகிறேன்.
ஆஹா உனக்கும் இங்கே
காவல் உண்டோ?
குழந்தையாய் நான் எண்ண
விழுங்கும் குழி என
விசில் சத்தம் விரட்டுகிறதே.
வயதை குறைக்க ஓடும் மனிதனும்
உன்னை கண்டு
அறுபதும் ஆறாய் மாற கண்டேன்.
கன்னி பையனாய்
கன்னியரை தொட நீ துரத்த
கால்களும் பின்னோடுகிறது.
இரு கையால் அடக்கி
அள்ளி விட
பிள்ளை செல்வங்களும் ஆசை கொள்ளுமே.
ஓடும் ஓட்டம் கால் நோக
ஓரம் அமர
எனை பார்!
நான் ஓய்ந்தால்
தேடும் மனங்களும் ஓடி விடும்.
ஓயாதே மனிதா.
ஓய்ந்தால் ஆறடி குழிக்குள்
அடக்கி விடுவார்கள்.
துள்ளி எழு.
நீ சிந்தும் புன்னகை
என் ஆழம் வரை பாயட்டும்.