அவள்…

உலக வரைபடத்தில் தீவுகளால் சூழப்பட்ட அழகிய நாடு. இயற்கை வளங்களை அள்ளித்தெளித்து அழகொழிரும் திருநாடாம் இலங்கையில் செம்மொழியாம் தமிழ் பேசும் வீரம் நிறைந்த மண்ணில் மலர்ந்தவள் தான் அவள்.

ஐப்பசி திங்கள் சூரியனாய் வந்துதித்தவள், துடுக்குத்தனமும், துடியாட்டமும் நிறைந்த சின்னப்பாவையாய் துள்ளித்திரிந்தவள். அண்ணன். அக்காவிற்கு செல்லப்பிள்ளையிவள். விவசாயமே வாழ்வாதரமாகக் கொண்டிருந்தாலும் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது. அயல் வீட்டு ஆச்சிமாருக்கு மிகவும் பிடித்தவள். ஆச்சிக்குத் தேவையான சின்ன சின்ன வேலைகளில் ஒத்தாசையாய் உடனிருப்பாள். கடைக்குப் போய் வெற்றிலை வாங்கிக் கொடுத்தால் ஒரு வட்ட அப்பம் வாங்க காசு கிடைக்கும். அத்தனை சந்தோசமாக துள்ளி மகிழ்வாள். எத்தனை இனிப்பு பண்டங்களை வாங்கிக் கொடுத்தாலும் ஆச்சியின் காசிற்கு வாங்கியது தான் பெரிதென்ற குழந்தை மனம்.

காலம் ஓடிக் கொண்டிருந்தது. இலங்கைப் பிரச்சனையால் எல்லோர் வாழ்வும் சின்னபின்னமாகிப் போனது மறுக்க முடியாத ஓர் அவலம். விமானத்தாக்குதல்கள், எறிகணை வீச்சுக்கள், துப்பாக்கிச் சத்தங்கள் என்று பிஞ்சு வயதிலேயே பயத்துடன் நிம்மதியற்ற வாழ்க்கைக்குள் தள்ளபட்ட துயரங்கள் வரலாற்றில் இலங்கைத் தமிழர்களை விட யாரும் அதிகம் அனுபவித்திருக்க மாட்டார்கள். உணவு, கல்வி, பொருளாதாரம், மருத்துவம் எல்லாமே முடங்கிப் போக பசியும், பட்டினியுமாய், ஏதிலிகளாய் அலைய ஆரம்பித்த நாள் அவள் வாழ்க்கையிலும் கறுப்பு நாளாகப் பதிந்தது. நோயாளியான அப்பாவுக்கு மாத்திரை போட ஒரு வேளை உணவிருக்காது. சில நேரங்களில் மாத்திரையும் இருக்காது. சுருண்டு பசியோடு கிடக்கும் பிள்ளைக்கு ஆக்கிப் போடுவதற்கு கடை கடையாய் திரிந்து கடனாகவேனும் ஏதோ ஒன்றை வாங்கி காய்ந்த வயிற்றை குளிர வைத்து தூங்கி எழுவதற்குள் மறுநாளும் புலர்ந்து விடும்.

இவ்வாறு புரண்டோடிய காலத்தில் யுத்தத்தின் கொடூரத்தால் ஊரை விட்டு புறப்பட்ட பேரவலம் எப்படி மறப்பது. உடுத்திருந்த ஒற்றையுடையும், புத்தகப் பையும் மற்றும் சில அவசியமானவையுடன் எங்கே போவது என்று தெரியாது வீதி வழி நடந்தது கால்கள். பசி, தாகம், தூக்கம், களைப்பு எல்லாமே வாட்டியது. எங்கோ ஒரு பாடசாலையில் ஊர் மக்கள் தஞ்சமடைந்திருப்பதை அறிந்ததும் அங்கே போய் தஞ்சம் அடைந்து, நிறுவனங்கள் கொடுக்கும் உப்புக் கஞ்சிக்கு வரிசையில் நின்று மிதிபட்டு, தள்ளுப்பட்டு பசி மறந்து ஏதுமின்றி வெறுங்கையோடு சுருண்டு படுத்திருந்த நாட்கள் எண்ணிட முடியாது.

ஏதோ ஒரு வழியாக உறவினர் தொடர்பு கொண்டு அங்கிருந்து புறப்பட்டு எஞ்சியிருந்த அத்தனையும் பக்குவமாய் கொண்டு வந்து வாடகைக்கு வீடெடுத்து எப்படியாவது பள்ளியில் சேர்க்க வேண்டுமென்று கன்னியர்மடத்தில் காவல் நின்று அப்பா பட்டபாட்டை எப்படி மறப்பது. ஊரில் விட்டு வந்த அத்தனையும் யார் யாரோ கொண்டு போக வெறும் வீடாய்க் கிடக்குது என்று அம்மாவும், அப்பாவும் இடிந்து போய் உட்கார்ந்து புலம்பியது வார்த்தையால் சொல்லிட முடியாத ரணம்.

அங்கேயும் ராஜ வாழ்க்கையை எதிர்பார்த்துச் செல்லவில்லை. இருந்தாலும் கல்வியும், இருக்க இடமும் கிடைத்ததே அன்றைக்குப் போதுமாயிருந்து. நாட்கள் நகர நகர போரின் உச்சக்கட்டம் தலைவிரித்தாடியது. விமானத் தாக்குதல்களின் பயங்கரம் பதறவைக்கும். ஈனமற்ற மனிதர்கள் இன்னுமொரு மனித இனத்தை இரையாக விழுங்கிக் கொண்டிருந்தார்கள். எங்கும் மரண ஓலங்கள், பிணக் குவியல்களாக சிதறுண்டு கிடந்த அவலம் குருதி உறையும் வரலாறு. எல்லாவற்றையும் பார்த்து இருந்தவள் கல்வியை இடை நிறுத்தி விட்டு மண்மீட்புப் பணிக்காய் தன்னையும் இணைத்தாள். பதினைந்து வயதில் அவளுக்குள் என்ன மண்பற்று என்ற ஆச்சரியம் அவளுக்கும் தான். சின்னப்பிள்ளை என்று பொத்தி வளர்த்தவள் எப்படி குடும்பத்தை விட்டுப் பிரிந்தாள். எதனால் வந்தது இத்தகைய துணிச்சல். இருளுக்குப் பயம், பாம்புக்குப் பயம், ஏன் கட்டெறும்பு கரப்பானுக்கும் பயம் என்றால் பொய்யில்லை. எப்படி சாத்தியம், ஏதோ ஒரு ஓர்மத்தில் போய்விட்டாள் வீடு திரும்புவாள் எனப் பார்த்திருக்க வீரமகளாய் உருவெடுத்தாள்.

தன் கடமை என்னவாக இருந்தாலும் பொறுப்புடன் செய்யும் பக்குவம், அடுத்தவர்க்கு உதவி செய்வதில் முன்நிற்பவள். சற்று முன்கோபம் என்றாலும் நியாயம் அற்றதாக இருக்காது. பெரியவர்களைப் பார்த்து தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவள். கால ஓட்டத்தில் ஓடும் காட்டாற்று வெள்ளமென கனவுகள் கலைந்து போனாலும் மண்பற்று ஏனோ அவளை முழுமையாய் பற்றிக் கொண்டது. சகோதரிகள் புலம் பெயர்ந்து சென்று விட, அண்ணன்கள் இருவருமாய் தம்மையும் இணைத்துக் கொள்ள அம்மாவும், அப்பாவும் தனித்து நின்ற போதும்கூட காலம் வரும் போது வருகின்றேன் என்ற பக்குவமான பதிலில் அவளின் அர்ப்பணிப்புடன் கலந்த மண்பற்று தெளிவாகப் புரியும்.

பல்வேறு பணிகளில் பயிற்றுவிக்கப்பட்டவள், அன்று எதிர்பாராத விதமாக பாரிய ஆபத்தில் சிக்கினாள். போரின் கோரத் தாண்டவம் அவளை இலக்கு வைத்தது. எங்கிருந்தோ வந்த துப்பக்கிக் குண்டொன்றின் இலக்கிற்கு இரையானாள். முள்ளந்தண்டுவடம் பாதிப்புற துள்ளித் திரிந்த இரு கால்களும் அசைவின்றிக் கிடந்தது. கால் இரண்டையும் இழந்து விட்டதாக எண்ணியபடியே மயக்கமடைந்து விட்டாள். மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை முடிந்து விடுதி மாறும் வரை அவளுக்கு எதுவும் தெரியாது. எனக்குக் கால் இல்லை என புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு இடியாய் வந்த செய்தி, அவளிற்கு இடுப்பிற்குக் கீழ் உணர்ச்சியில்லை என்ற செய்தி. அவள் முதல்முதல் சொன்ன வார்த்தை ஏன் என்னைக் காப்பாற்றினீர்கள், என்னைக் கொன்று விடுங்கள் என்றே மன்றாடி அழுதாள்.

உடல் வேதனை ஒருபுறம், மன அழுத்தம் ஒரு புறம் அவள் வாழக்கையே ஒரு நொடியில் மாறிப் போனது. தாங்கிக் கொள்ள முடியாத பாரமாய் மனது நொருங்கிப் போனவள் உடனிருந்தவர்களால் பண்படுத்தப்பட்டாள். எத்தனையோ அங்கவீனமானவர்களின் கதைகள், அவர்களுடைய சுயமுயற்சிகள், சாதனைகள் என்று தன்னை மாற்றிக் கொள்ள அவள் அதிகம் ஆராய வேண்டி இருந்தது. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டி இருந்தது. நான்கு சக்கர வண்டி தான் வாழ்க்கை, இனி நடக்க முடியாது என்ற மருத்துவரின் அறிவுரையை ஏற்க மறுத்து, நான் நடப்பேன் என்று உறுதியாய் சொன்னாள். மூன்று வருடங்கள் அவள் பல உடல் உபாதைகளால் சிரம்ப்பட்டாள். இருந்தாலும் பல இழப்புக்கள் அவளை சோர்வடையச் செய்தது. சகோதரனை இழந்து மனமுடைந்தவள் அவனது தியாகத்தை புரிந்து கொண்டு நாளடைவில் ஆறுதலடைந்தாள்.

எப்படியாவது கால் எடுத்து நடக்க வேண்டும் என்ற வைராக்கியம் அவளுக்குள் ஒரு கனவாகவே சுழன்றது. மெல்ல மெல்ல எழும்பி நிற்க ஆரம்பித்தவள் அடி எடுத்து வைக்க ஆரம்பித்தாள். மீண்டும் ஒரு குழந்தையாய் தத்தி நடந்து, விழுந்து எழுந்து நடை பயின்றாள். நாட்கள் செல்லச்செல்ல ஊன்று கோல் பிடித்து நடக்கும் நிலைக்கு வந்து விட்டாள். முடங்கிக் கிடந்த கால்கள் புத்துணர்வு பெற்றது. மனதில் நம்பிக்கை பிறந்தது. அடுத்தவர்களின் உதவியின்றி அவளால் எல்லாவற்றையும் செய்ய முடிந்தது. ஏதாவது செய்ய வேண்டும், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவளை கணினி படிக்கத் தூண்டியது. ஆர்வம், தேடல் இரண்டுமே அவளை அதிகம் ஊக்கப்படுத்தியது.

அவளும் எல்லாரையும் போல் சராசரிப்பெண்ணென்ற வகையில் எல்லா விருப்பு, வெறுப்புக்களையும் பகிர்ந்து வாழ்ந்தாள். அழகான சில நட்பு வட்டங்களை மட்டுமே தனக்கென வைத்துக் கொண்டாள். அதிகம் யாருடனும் ஒட்டிக் கொள்ளாதவளை திமிர் என்று புறம் பேசியவர்களை அமைதியாக கடந்து செல்வாள். பள்ளிச் சிநேகிதனை பல வருடங்களின் பின் சந்தித்ததன் பின்னால் ஏற்பட்ட உறவு காதலாக மாறியது. பல கனவுகள் சிறகடிக்க வானுயரப் பறக்கும் பறவையாய் வலம் வந்தாள். அழகான காதல் பயணம் போரின் உக்கிரமான காலத்தில் கேள்விக்குறியாக நின்றது. பிரிவதா, சேர்வதா என்ற பல நாள் போராட்டம் விதியின் சதியால் பிரிவாகிப் போனது. போரின் வடுக்களை சுமந்தவள், காதல் கொடுத்த காயத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டாள். கனவுகள் சிதைந்த பறவையாய் மீண்டும் சின்னா பின்னமான சிறை வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு சமூகத்துடன் பிணைந்த வாழ்க்கைக்குள் உள்வாங்கப்பட்டாள்.

எல்லாமே அவளுக்கு புதிதாய் இருந்தது. நேர வரையறைக்குட்பட்ட ஒரு வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புது வாழ்வை புரிந்து, தன்னை மாற்றிக் கொள்வதில் பல சிரமங்களைச் சந்தித்தாள். குடும்ப உறுப்பினர் யாருமற்ற தனிமை ஒரு புறம், உறவுகள், சுற்றத்தாரின் புரிந்துணர்வற்ற புண்படுத்தும் வார்த்தைகள் அவளை மிகவும் நொருக்கியது. தமக்குப் பாரம் என்பதை சொல்லிக் காட்டி, செயல்களால் புண்படுத்திய போது மனமுடைந்து தனக்குள்ளே குமுறி நாளடைவில் உணர்வற்றவள் போல் நடமாடும் வெற்றுடலாய் காலத்தைக் கழித்தாள்.

படித்த பாடசாலையில் தன்னால் முடிந்த பணிகளை செய்து கொண்டிருந்தவள் மீதான உறவுகளின் பார்வைப் புலமையின் தெளிவின்மை விம்ர்சனங்களை நாளுக்கு நாள் சொற்களால் வீசியது. அங்கிருந்து இடம் மாற வேண்டிய முடிவைத் தவிர வேறு வழியின்றி நிம்மதிக்காய் இடம் மாறினாள். நான்கு வருடங்கள் அவள் வாழ்க்கை மகிழ்ச்சிக் கடலில் பயணித்தது. சராசரிப் பெண்ணாக சுதந்திரக் காற்றில் சிறகடித்துப் பறந்தாள். இடையிடையே வந்து பெற்றோர் பார்த்துச் செல்வதும் மீண்டும் தனிமையில் இருப்பதுமாய் காலங்கள் ஓடிய போது, மீண்டும் பெற்றோருடன் சேர்ந்து வாழும் சந்தர்ப்பம் கிடைத்தது. கொடிய நோய் கொரோனாவின் தாக்கம் உலகை ஆட்டிப்படைக்க உலகமே முடங்கி வாழ்வியலே மாறிப் போனது.

மீண்டும் வெளிநாடு திரும்ப முடியாமல் பெற்றோரும் அவளுடன் தங்கி விட்டனர். பெற்றோருடன் வாழும் பாக்கியத்தை வரமாக அடைந்ததாய் உணர்ந்தாள். அவர்களுக்கான கடைமையை செய்வதற்கான ஒரு வாய்ப்பாக கருதினாள். பார்த்துப் பார்த்துக் கவனித்தாள். தந்தையின் உடல் நிலையில் அதிக கவனம் காட்டியவளை காலம் ஏனோ பகைத்துக் கொண்டது. கால் நோவுக்கு வைத்தியம் பார்க்கச் சென்ற இடத்தில் கொரோனா தொற்றி விட காய்ச்சல், இருமல் ஒருபுறம் மூச்சுத் திணறல் ஒருபுறமாகச் சிரம்ப்பட்ட தந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதை தவிர வேறு வழி இருக்கவில்லை.

வைத்தியசாலைக்கு சென்ற அப்பா வீடு திரும்பாத ஏமாற்றம். மூன்று நாட்கள் ஒட்சிசன் கொடுக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்க , சென்று பார்க்க முடியாது தனிமைப்படுத்தலில் தாயும், அவளும் வீட்டில் தனிமையில் கண்ணீர் சிந்த, ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் நாட்கள் எண்ணிக் கொண்டிருந்தவள் தந்தையை பராமரித்தவரிடம் இருந்து வரும் தகவலுக்காய் காத்திருந்தாள். அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதி அம்புலன்சில் பொருட்களுடன் சேர்த்து அனுப்பிவிட்டு ஆவலோடு இருந்தாள். அப்பா கவலைப்படுவார் , கடிதம் பார்த்தால் ஆறுதல் அடைவார் என்ற நம்பிக்கை அவளை ஏமாற்றி விட்டது. அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து மனச்சஞ்சலத்தால் கடவுளிடம் கையேந்தினாள். நெஞ்சுப் படபடப்பும், உடற்சோர்வும் இயலாமையை இருமடங்காக்கியது. அதிகாலை புலர்ந்தது இடியாய் வந்தது அப்பாவின் மரணச்செய்தி. இடிந்து, நொந்தழுதவளை யார் தேற்றுவார். தனிமைப்படுத்தல் காரணமாக யாரும் வீட்டிற்கு வர முடியாது. துயர் மிகுதியால் அழுது புலம்பி வைத்தியசாலையில் தந்தையின் உடலை எட்டி நின்று பார்த்து விட்டு ஆற்றாமை இன்றி வீட்டிற்கு வந்தாள்.

அப்பாவின் ஆசைகள் கண்முன்னே விரிந்து நிற்க செய்வதறியாது தவித்தாள். புலம்பெயர் நாட்டிலிருந்து சகோதரிகளோ, உறவுகளோ வரமுடியாத நிலை, தாயும், அவளும் தனிமரங்களாய் கதறிக் கொண்டு இருக்க, உறவினர்கள் தந்தையின் உடலை தகனக் கிரியை செய்து அஸ்தியை அடக்கம் செய்தனர். தந்தையின் உடலுக்கு ஒருபிடி மண் போடக் கூட கொடுத்து வைக்கவில்லையே என்ற வேதனை மனதை வேதனைப் படுத்தியது. இருபத்தியொரு நாட்டகளாக யாரையும் நேரில் பார்த்து ஆறுதல் தேட முடியாத துர்ப்பாக்கிய நிலையில் அழுது கொண்டே நாட்களை கழித்தாள். உறவினர், நண்பர்களின் தொலைபேசியூடான ஆறுதல் வார்த்தைகளும், உறவினர், அயலவரின் உதவிகளும் அந்நேரத்தில் பெரும் உதவியும், பலமுமாக இருந்தது.

31ம் நாள் நினைவு நாளை ஊர், உறவுகளுடன் கூடி அப்பாவுக்கான கடைமைகளை ஆன்ம இளைப்பாற்றித் திருப்பலியோடு ஓப்புக் கொடுத்து, கல்லறையை முதல் முதலாக பார்க்கச் செல்ல அவளால் முடியவில்லை. தன்னை தூக்கி வளர்த்த தந்தையை கல்லறையாய் காணுதல் என்பது விபரிக்க முடியாத ரணம். ஒரே கல்லறையில் போரினால் கொல்லப்பட்ட சகோதர்ர்களின் பெயரையும் பொறித்திருந்ததைப் பார்த்ததும் தாங்க முடியாத வேதனையால் ஓலமிட்டு கதறியவள் சுயநினைவை இழந்து விழுந்தாள். கண் விழித்துப் பார்த்தவள், அப்பாவின் கல்லறை மாலையும், பூவுமாய் இருந்த அழகை எப்படி இரசிக்க முடியும். கண்ணீரோடே வீடு வந்தவள் உறவுகளின் ஆறுதலால் சற்று அமைதியானாள்.

தினமும் அப்பாவின் நிழல்படத்திற்கு பூ வைத்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்த வேண்டிய நிலையில் மிகவும் மனவேதனைக்குள்ளானாள். கலகலப்பும், மகிழ்ச்சியுமாய் இருந்தவள் தனிமையும், அமைதியுமாய், ஒதுங்கி இருக்க ஆரம்பித்தாள். யாருடனும் பேசுவதில்லை, வெளியில் செல்வதில்லை, தனிமையை தேடித் தேடி அப்பாவின் இழப்பின் துயரத்தில் இருந்து மீள வழியின்றித் தவித்தாள்.

புலம்பெயர் நாட்டிலிருந்து பெற்றோர் விடுமுறையில் வந்திருந்தால் மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட அம்மா மீண்டும் வெளிநாடு சென்று விட ஆறுமாதங்கள் தனிமைக்குள் தள்ளப்பட்டாள். கடந்தகால நினைவுகள், இழப்புக்கள், அப்பாவின் ஞாபகங்கள் எல்லாம் நாளும் பொழுதும் படமாக விரிந்தது. ஒவ்வொன்றாக மீட்டுப் பார்த்து அழுகையும், ஆற்றாமையுமாக இருந்தவள் மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளானாள். அதிகமான கோபம், விரக்தி, வெறுப்பு, எதிலும் பற்றற்ற மனநிலை, தன்னைத் தாக்கிக் கொள்வது என்று முற்றிலுமாக அவள் மாறினாள். அப்பாவிடம் போகப்போகிறேன் என்ற எண்ணத்தில் தற்கொலை முடிவைக் கூட அவள் தீர்மானித்தாள். அடுத்தவர்களிற்கு தான் பாரமாகி விட்டேன் என்ற மனநிலை தினமும் அவளை நொருக்கியது.

நான் நானாகவே இல்லை என்பதை அவளே பல தடவை உணர்ந்தாள். தூக்கமின்மை, பசியின்மை, எதிர்மறையான சிந்தனைகள் என்று அவள் ஒரு வேறுபட்ட உலகத்தை தனக்குள் உணர்ந்தாள். யாரிடம் பேசுவது, இதற்கான மாற்று வழி என்ன என்பதை தானாகவே தேடினாள். சகோதரன் ஒருவரிடமே அதிகமான விடயங்களை பகிர்பவள், எல்லாவற்றிலும் அவனே அவளுக்கு பலமாக இருந்தான். தன் மனநிலையையும், உடல் நிலை மாற்றங்களையும் பகிர்ந்தாள். மருத்துவரின் உதவி அவசியம் என்பதை அவனும் புரிந்து கொண்டான். வலைத்தளத்தில் ஆராய்ந்து மருத்துவரின் விபரங்களைப் பெற்று, தனியார் மருத்துவமனை ஒன்றிற்குச் சென்று மருத்துவரைச் சந்தித்தாள்.

மருத்துவரிடம் தனது உடல், மனநிலை மாற்றங்களை எடுத்துக் கூறினாள். அவளது மாற்றங்களின் காரணம் இழப்புக்களும், தனிமையினால் ஏற்பட்ட மன உளைச்சலும் தான் என்பதை மருத்துவர் உறுதியாகக் கூறினார். அவளுக்கான ஆலோசனைகளை வழங்கி, மருந்துகளும் கொடுத்தார். இரண்டு மாதங்கள் அவளுக்கு மனநலத்திற்கான விசேடமான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நாளுக்கு நாள் அவள் தனக்குள் ஒரு மாற்றத்தை உணர்ந்தாள். படிப்படியாக அவளால் குணமடைய முடிந்தது. புதியதொரு மாற்றம், அமைதி, நிம்மதியான தூக்கம் என்று பல முன்னேற்றங்களை தன்னில் அறிந்தாள். இழப்புக்களும், ஏமாற்றங்களும், துயரங்களும் கடந்து தான் வாழக்கையை வாழ வேண்டும். வாழ்ந்த நாட்களை அர்த்தமுள்ளதாக வாழ்தலே வாழ்வில் எல்லையற்ற மகிழ்ச்சி என்பதே யாதர்த்தமானது. அவள் தன்னையும் தெளிவாக ஆய்ந்தறிந்து, தனக்கான ஒரு புதிய பயணத்தை ஆரம்பிக்கும் கனவோடு புதிய ஒரு தேடலுக்குள் நுழைந்து விட்டாள். தனக்கான ஒரு புதிய உலகத்தை அவள் காண்பாள் என்ற நம்பிக்கையோடு கடந்த காலங்களின் கசப்பான நினைவுகளை மறந்து தோல்விகளை ஏணிப்படியாக்கி, விமர்சனங்களை ஆலோசனைகளாக எடுத்துக் கொண்டு தன் பயணத்தை ஆரம்பித்து விட்டாள். இனிமேல் அவள் வாழ்வில் எல்லாம் நலமே.

எழுதியவர் : றொஸ்னி அபி (25-Nov-22, 10:55 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 161

மேலே