அது ஒன்றே போதுமடி

தத்தித் தத்தி நடக்கும்
தத்தை அவள் அழகில்
திக்கித் திக்கிப் பேசும்
தித்தித்திடும் மொழியில்
சொக்கிப் சொக்கிப் போனேன்.
சொர்க்கம் போய் வந்தேன்.
பொக்கை வாய் மலர்ந்து
சிரித்திடும் வேளையில்
ரெக்கை விரித்து விண்ணில்
பறந்து என்னை
மறந்து போனேன் மகளே...!

நீ
என் உயிர்...
என் உதிரம்...
என் பதிப்பு...
என் சாதனை...
தலை நிமிர்ந்து போனேனடி...!
உன் பிஞ்சு விரல் பிடித்துத்தான்
நான் நடை பழக ஆரம்பித்தேன்.
நடை வண்டி நீ
இழுத்து போகையிலே நான்
நடை மறந்து மயங்கினேன்.

என் வாழ்வின் அர்த்தம் நீ...
என் வாழ்வின் அதிசயம் நீ...
கிடைத்ததற்கரியா பொக்கிஷம் நீ...
வானின்று இறங்கிய எல்லையில்லா
ஆசிர்வாதம் நீ...
குழந்தையாய் நான் வாழ
குருவாய் வந்த எந்தன்
குலதெய்வம் நீ...
என் மகள்
என் மகள் என்று
இறுமாப்பு அடைந்தேனடி.
ஏழேழு ஜென்மமும்
நான் உனக்குத் தந்தையாய்
நீ எனக்கு மகளாய்
பிறந்திட வரம் ஒன்று வேண்டுமடி.
வாழ்வில் அது ஒன்றே போதுமடி..

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (30-Nov-22, 7:29 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 7529

மேலே