நானெழுதுவேன் என்னுயிர் தமிழால்

கயமையைக் கடுஞ்சொல் கொண்டு விமர்சித்தால்
கயவர்க்கு கல்லால் அடித்தது போலிருக்கும்,
வாய்மையால் உலகம் நல்வழி கண்டிடும்,
வாய்யால் வந்திடும் அழிவு.

சொல்லும் வார்த்தையில் இருக்கும் உண்மை
பொல்லாதவன் என்னும் பெயரைத் தந்திடும்,
வல்லமை பேசிக்கொண்டே திரிந்தோம் என்றால்
பொல்லாமைதான் விளையும் தரணியிலே.

பகுத்தறிந்து வாழ்வதே வாழ்வாம் மாறாக
பாகுபாடு பாராட்டித் திரிதல் பாழ்படுத்தும்,
நல்லோர் நலம்பெற இன்சொல் போதுமானது,
நல்லாரல்லார் மகிழ்வதெல்லாம் கொடுஞ்சொல்லிலே.

காக்கைக்கு கரைந்து கொண்டிருப்பதே கதையாம்,
யாக்கைக்கு தன்பசியே உலகில் பெரிதாம்,
நாக்கின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தாமல் கண்டபடி
வாக்குக் கொடுப்பதே மடமை.

பித்தம் தலைக்கேறி அனுதினமும் அறிவிழந்து
சித்தமது செம்மையுறு நலவழிதனை கேலிப்பேசி
பக்குவம் அடைந்த மனிதர்களையும் பகடையாடி
பக்கமிருந்து கெடுக்கும் தலைக்கனம்.

எங்குயாம் பிறந்தாலும் சிறப்புடைமைக்கு தகுதியுண்டு,
இங்குயாம் பிறந்தால்தான் சிறப்பென்பது தகாதது,
எதுவாயினும் தீராய்ந்து செய்யின் செம்மையுறும்,
மதுவால் மயங்காதே மதியே.

இலக்கணமும் நானறியேன் நயமுற உள்ளிருந்து
இலக்கமின்றி நானெழுதுவேன் என்னுயிர் தமிழால்,
தயக்கமில்லை தரணியிலே தமிழால் நானெழுத,
பயக்கும் என்னெழுத்தால் நன்மையே.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Dec-22, 11:11 pm)
பார்வை : 1192

மேலே