நன்ஞான முயற்சியில் நடப்பனவே கால்களாம் – அறநெறிச்சாரம் 203

நேரிசை வெண்பா

கொல்வதூஉங் கள்வதூஉம் அன்றிப் பிறர்மனையிற்
செல்வதூஉஞ் செய்வன காலல்ல - தொல்லைப்
பிறவி தணிக்கும் பெருந்தவர் பாற்சென்(று)
அறவுரை கேட்பிப்ப கால். 203

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

பிற வுயிரைக் கொல்லவும் பிறருடைமையைத் திருடவும் அல்லாமல் அயலான் மனைவியிடத்தே விழைந்து கூடவும் செல்வதற்கு உதவுவன கால்களாகாது;

துன்பத்தை விளைவிக்கும் பிறவிப் பிணியைப் போக்கியருளும் மிக்க தவத்தினையுடைய முனிவர்பால் அடைந்து அவர் கூறும் அறவுரையைக் கேட்குமாறு செய்வனவே கால்களாகும்.

குறிப்பு:

மனை-மனைவி: தொல்லைப் பிறவி - பழைமையாக வரும்பிறப்பு எனவும் கொள்ளலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Dec-22, 10:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

சிறந்த கட்டுரைகள்

மேலே